இலங்கை - இந்திய பொருளாதார உறவுக்கு சவாலாக அமையும் கச்சத்தீவு விவகாரம்
இந்தியாவிற்கும் (India) இலங்கைக்கும் (Sri Lanka) இடையிலான இருதரப்பு உறவுகள், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த நிலையில் உள்ளதாக இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், வளர்ந்து வரும் கடற்றொழிலாளர் தகராறு இந்த உறவுகளின் சாதனைகளை சவாலுக்கு உட்படுத்தும் ஆற்றல் கொண்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இந்தப் பிரச்சினையை, சீனா, அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு சக்திகளின் மூலோபாய கவனத்தின் பின்னணியில், இந்தியப் பெருங்கடலில் கடல் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சூழலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மோடியின் இலங்கை பயணம்
மும்பையை தளமாகக் கொண்ட மசகான் டொக்ஸ் என்ற இந்திய பொதுத்துறை நிறுவனம், சமீபத்தில் கொழும்பு டொக்ஸை கையகப்படுத்தியமை இந்தியாவின் மூலோபாய நகர்வாக பார்க்கப்படுகிறது.
இது, சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வரும் ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற முக்கிய இடங்களை இந்தியா இழக்காமல் பாதுகாக்கும் முயற்சியாகும்.
இதனுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள், இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பை முறைப்படுத்தியுள்ளன.
இந்தியாவும் இலங்கையும் ‘கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில்’ (CSC) கூட்டாளிகளாக உள்ளன. இது ஆரம்பத்தில் எண்ணெய் கசிவு போன்ற பாரம்பரியமற்ற கடல் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது, ஆனால் இப்போது சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.
கடற்றொழிலாளர் தகராறு
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையின் ஒரு பகுதியாக, கெரோனா கால உதவிகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது வழங்கப்பட்ட நிதி உதவிகள், இரு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையை வளர்த்துள்ளன.
கடற்றொழிலாளர் தகராறு, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு இருதரப்பு ஒப்பந்தங்களின் எதிர்பாராத விளைவாக உருவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், ஐ.நா. கடல் சட்ட மாநாட்டின் (UNCLOS) கீழ் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) வரையறுக்க நோக்கமாகக் கொண்டவை.
ஆனால், இந்திய கடற்றொழிலாளர்களின் அதிவேக அடிமட்ட இழுவைப் படகுகள் மற்றும் பர்ஸ் சீன் வலைகளின் பயன்பாடு, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு, குறிப்பாக வடக்கின் தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மீன் வளங்களையும் கடல் சூழலையும் அழிக்கிறது என்று இலங்கை தரப்பு குற்றம்சாட்டுகிறது.
இரு நாடுகளும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றன. இலங்கை தரப்பு, இந்திய கடற்றொழிலாளர்கள் அழிவு முறைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இந்தியா, ஆழ்கடல் மீன்பிடி முயற்சிகளை ஊக்குவிக்கும் மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள், இந்திய கடற்றொழிலாளர்களின் அழிவு முறைகள் நிறுத்தப்படும் வரை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
மேலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகள் மற்றும் நடுக்கடல் மோதல்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ள நிலையில் கச்சத்தீவு தீவு தொடர்பான சர்ச்சை, கடற்றொழிலாளர் தகராறுடன் இணைந்து, இருதரப்பு உறவுகளில் நீண்ட நிழலை வீசுகிறது.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல்
தமிழக அரசியல்வாதிகள், குறிப்பாக மறைந்த ஜெயலலிதா மற்றும் எம். கருணாநிதி, இந்த ஒப்பந்தங்களை இரத்து செய்யக் கோரி வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, UNCLOS உறுதிமொழிகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வந்தால் சர்வதேச அரங்கில் சிக்கல்களை உருவாக்கலாம்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள், கச்சத்தீவு பிரச்சினையை மீண்டும் அரசியல் சர்ச்சையாக உயர்த்தலாம். இது, இருதரப்பு உறவுகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இலங்கையின் மூலோபாய வட்டாரங்கள், இந்தியாவின் அரசியல் சூழல் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கலாம் என்று அஞ்சுகின்றன.
கடற்றொழிலாளர் தகராறு மற்றும் கச்சத்தீவு பிரச்சினை ஆகியவை, இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளுக்கு சவாலாக உள்ளன.
இந்தியாவும் இலங்கையும் இந்தப் பிரச்சினைகளை அரசியல் மற்றும் தேர்தல் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் நம்பிக்கை கட்டமைப்பு மூலம் தீர்க்க முயல வேண்டும். இல்லையெனில், இந்தச் சிக்கல்கள் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையலாம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
