கச்சத்தீவு திருவிழா 2024 : இந்திய பக்தர்களுக்கு அழைப்பு!
கச்சத்தீவில் எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு
ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்கு நீரிணை’ கடற்பரப்பில் அமைந்துள்ளது.
ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.
அந்தோனியார் தேவாலயம்
கடந்த 1913 ஆம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோனியார் தேவாலயம் நிறுவப்பட்டது.
கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்துக் காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்துவர்.
ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்திய பக்தர்களுக்கு அழைப்பு
இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், ராமேசுவரம் பங்குத் தந்தை சந்தியாகுவுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, திருப்பலிகள் நடைபெறும் எனவும் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், இரவு தேர்ப் பவனியும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், எதிர்வரும் 24 ஆம் திகதி காலை சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும் பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும் எனவும் பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “கச்சத்தீவுக்குப் பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் உரிமையாளர்கள் ராமேசுவரம் சூசையப்பர் ஆலய வளாகத்தில் உள்ள கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பத்துடன் படகின் வாகனப் பதிவுப் புத்தகம் (ஆர்.சி), படகுக்கான காப்பீடு ஆவணம், படகு உரிமையாளரின் மார்பளவுப் புகைப்படம் ஆகியவற்றின் 3 நகல்களை இணைத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், படகுகளின் உரிமையாளர்கள் மூலம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |