இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : சாரதிகள் காரணமென விஜயதாச குற்றச்சாட்டு
இலங்கையில் வீதி ஒழுங்குகளை சாரதிகள் முறையாக பின்பற்றாததன் காரணமாக நாளாந்தம் அதிகளவான விபத்துக்கள் பதிவாவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி ஒழுங்குகள் சரிவர பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் வீதி ஒழுங்குகள் சரிவர பின்பற்றப்படாத காரணத்தால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, விஜயதாச ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
வீதி விபத்துக்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "அதிவேக நெடுஞ்சாலைகளில் பின்பற்றப்படும் வீதி ஒழுங்குகளை சாரதிகள் சரிவர பின்பற்றாத காரணத்தால், விபத்துக்கள் ஏற்படுவது கவலையளிக்கிறது.
நெடுஞ்சாலையில் இவ்வாறான விபத்து பதிவாகியுள்ளமை இது முதல் தடவையல்ல.
வீதி ஒழுங்குகள் சரிவர பின்பற்றப்படாமை அதிக விபத்துக்களுக்கு வழி வகுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சனத் நிஷாந்தவின் இழப்பு
புத்தளம் மக்களுக்காக நீண்ட நாட்கள் சேவையாற்றிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இழப்பு, குறித்த பகுதியில் உள்ள மக்களை பாரியளவில் பாதிக்கும்.
சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான முறையில் வெளியிடப்படும் கருத்துக்கள் கவலையளிக்கின்றன. அநாகரீகமானோர் இவ்வாறான பதிவுகளை மேற்கொள்கின்றார்கள்.
அவதூறான கருத்துக்கள்
சனத் நிஷாந்தவுக்கு முன்னர் இலங்கையில் உயிரிழந்த சிலர் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இது உயிரிழந்தோரை பாதிக்காது. மாறாக இவ்வாறான பதிவுகளை மேற்கொள்வோரின் குணத்தை பிரதிபலிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |