13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு - இலங்கை அரசு திட்டவட்டம்
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவை மீட்கப்போவதாக தமிழக அரசியல்வாதிகளால் கூறப்படும் விடயம் குறித்து, இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
யாரிடத்திலிருந்தும் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டோம். இறைான்மை கொண்ட நாடாக நாங்கள் சுதந்திரமாகவே செயற்படுகின்றோம். 13ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் நட்புரீதியாக எமக்கு பேச்சு நடத்தமுடியும். கச்சத்தீவு விவகாரம் இன்று நேற்று உருவானதல்ல.
பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல அரசியல்வாதிகள் அரசியல் தேவைக்காக தேர்தல்கள் நெருங்குகையில் மக்களுக்கு அதனை தருவோம், இதனைத் தருவோம் என்கின்றார்கள்.
எனினும் இந்தியா எமது அயல்நாடு. மிகவும் நெருக்கமான நட்புநாடு. ஆகவே கச்சத்தீவு விவகாரத்தில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கூறுகின்றேன்.