கிளிநொச்சி இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விஜயம்!
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இன்று (15) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, நாட்டில் நிலவிய கடந்த கால அசாதாரண நிலையினால் அழிவடைந்து, நீண்ட காலமாக புனர் நிர்மாண பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையிலுள்ள பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமான வயல் நிலங்களை பார்வையிட்டார்.
விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள்
230 ஏக்கர் நிலப் பரப்பில் அமையப்பெற்ற குறித்த தொழிற்சாலையினை விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அமைச்சரின் விஜயம் அமைந்திருந்தது.
இந்த கள விஜயத்தில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், அமைச்சின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிராம சேவகர், கண்டாவளை பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |