புறக்கணிக்கப்படும் காத்தான்குடி வீதிகளின் அபிவிருத்தி திட்டம் : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
காத்தான்குடி முக்கிய வீதிகளின் அபிவிருத்தி திட்டமிடப்பட்ட அடிப்படையில் தடுத்து நிறுத்தப்படுவதாக தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் யு.ட.எம்.என் முபீன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காத்தான்குடியின் முக்கிய வீதிகள் நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான நஸீர் அஹமட் கவனத்திற்கு இவ் வீதிப் புறக்கணிப்பை நாம் கொண்டு சென்றோம்.
வீதி அபிவிருத்தி
இதனடிப்படையில், அவரின் தீவிர முயற்சியினால் அல் அக்ஸா வீதி, டீன் வீதி, பெண்கள் சந்தை வீதி (மத்திய வீதி), கர்பலா பாலமுனை வீதி என்பன உலக வங்கியின் வேலைத் திட்டத்திற்கும் உள்வாங்கப்பட்டு காத்தான்குடி நகரசபை மற்றும் ஏனைய தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களால் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலக வங்கியின் இத்திட்டத்திற்கான பொறுப்பாளர்கள் , மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இவ்வீதிகளை மதிப்பீடு செய்து மதிப்பீட்டறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கேள்விப் பத்திரம் கோரப்பட்டு ஒப்பந்தகாரரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதையடுத்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில், தீடீரென இவ் வேலைத்திட்டத்தை குழப்பும் வகையில் யாரோ வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் ஒருவரால் இவ்வீதி package இல் ஒரு வீதி ஒன்றுக்கு மாத்திரம் கிறசர் கற்களை இட்டு அரைகுறையாக இவ்வீதியை புனரமைக்கத் தொடங்கியுள்ளனர்.
அதிகார சபை
இவ்வீதிகள் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உலக வங்கியின் ICDP வேலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதால் இந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளரின் சில இலட்சங்கள் செலவில் நடைபெறும் இந்த குருட்டு வேலையால் முற்று முழுதாக இவ்வீதிகள் அனைத்தும் இவ் உலக வங்கியின் வேலைத்திட்டத்தை இருந்து கைவிடப்படக்கூடிய ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி பணிப்பாளரே உங்களிடம் இன்னும் சில கேள்விகளை முன்வைக்கின்றேன், மட்டக்களப்பு அல்லது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை காத்தான்குடிக்கான வீதி அபிவிருத்தியை தடுப்பதற்கு திரைமறைவில் சதி செய்கிறதா?
IICDP திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட இவ் வீதிகள் ஒரு குறித்த package இற்குள் உள்ளடங்கும் நிலையில் இவ் வீதியில் ஒன்று எவ்வாறு குறித்த பொறியியலாளர் மயூரன் என்பவருக்கு கொடுக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்க காலம்
நல்லாட்சி அரசாங்க காலத்தில் மத்திய அரசு ஐ ரோட் ( I Road ) வேலைத் திட்டத்தில் எமது பெரும் முயற்சியின் பேரில் இவ் வீதிகள் உள்வாங்கிய போதும் பின்னர் திட்டமிட்ட அடிப்படையில் கொந்துராத்துக்காரரின் பிழையெனக் கூறி இவ்வீதிகளுக்கென ஒதுக்கப்பட்ட அத்தனை நிதியும் காத்தான்குடிக்கு மாத்திரம் இல்லாமலாக்கப்பட்டு இவ் வீதி வேலை காத்தான்குடியில் மாத்திரம் கைவிடப்பட்டது.
அப்போது இவ் ஐ ரோட்டிற்கான நிதியை மீளப் பெற்று வீதிகள் அபிவிருத்தி செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் அது காத்தான்குடிக்கு முடியாமல் போனது இப்போது மாத்திரம் எப்படி ஐ ரோட்டில் மிஞ்சிய பணம் எனச் சொல்லி சில இலட்சங்களில் மாத்திரம் செய்வதற்கு எப்படி முடியும்?
அப்போது முடியாத விடயம் இப்போது மாத்திரம் எப்படி முடியும் அத்தோடு அன்புள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளரே தயவு செய்து இவ் வீதி வேலைகளை முழுமையாக முடித்துத் தாருங்கள்.
ஐ ரோட் திட்டத்தில் முயன்றோம் முடியவில்லை அத்தோடு முன்னாள் அதிபர் கோட்டாவின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் திட்டத்தில் முயன்றோம் முடியவில்லை இப்போது ICDP வேலைத்திட்டத்தில் தயவு செய்து இந்த இவ்வீதிகளை முடித்துத் தாருங்கள் இம் முறையும் காத்தான்குடி மக்களை ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |