படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு - பிரதி அமைச்சரின் அறிவிப்பு
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (07.10.2025) உரையாற்றிய போதே சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க (Ruwan Ranatunga) இதனைத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பகுதியிலுள்ள மார்பள் பீச் மற்றும் ஸ்வீட் பே ஆகிய பகுதிகளை மையப்படுத்திய அரசாங்கத்தின் சுற்றுலா திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்த காலத்தில் பல காணிகளில் முப்படை வசமிருந்த நிலையில் அவை படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுவீகரித்துள்ள ஸ்வீட் பே காணி தொடர்பில் வழக்கு உள்ளது.
அது தீர்க்கப்பட்டவுடன் விருப்ப கோரல்கள் அழைக்கப்பட்டு, காணிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
முப்படையினர் வசம் பல காணிகள் உள்ளன. அவற்றில் விசேடமாக சுற்றுலா திட்டங்களுக்கு வழங்கப்படக்கூடிய காணிகளை உரிய அமைச்சுடன் கலந்துரையாடி விடுவிப்பதற்கும், அவற்றை பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
