தையிட்டி விகாரை காணி விடுவிப்பு : விகாராதிபதியுடன் முக்கிய சந்திப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி விடுவிப்பு தொடர்பில் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரரை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
தையிட்டி விகாரையில் நேற்றைய தினம் (02.01.2026) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 31ஆம் திகதி தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்
இந்த சந்திப்பின் போது திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக விகாராதிபதியுடன் அரசாங்க அதிபர் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தையிட்டி விகாரதிபதியை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும் அக் கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக பொருத்தமான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் விகாராதிபதி அரசாங்க அதிபரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விகாராதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் திரும்பும் வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும் அரசாங்க அதிபர் கலந்துரையாடியதாக யாழ். மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |