இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்! கைதான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு இலங்கையர்கள் (Sri Lanka) தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
குஜராத் (Gujarat) காவல்துறை மா அதிபர் விகாஷ் சாஹே (Vikash Sahay) இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் (India) அஹமதாபாத் (Ahmedabad) சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த விடயம் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளாக கூறப்படுபவர்கள் நீர்கொழும்பு (Negambo) மற்றும் கொழும்பு (Colombo) பகுதிகளில் வசிப்பவர்கள்.
கைது செய்யப்பட்ட 33 வயதான மொஹமட் நுஸ்ரத் (Mohammad Nusrat) என்ற நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான் (Mohammad Nafran), 43 வயதான மொஹமட் ரஷ்டீன் (Mohammad Rashdeen) மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் (Mohammad Farish) ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர்.
விசாரணைகள்
இவர்கள் சென்னை (Chennai) வழியாக அஹமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தும் நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து தொலைபேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமானச் சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் (Pakistan) இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை (Abu) கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், பின்னர் இவர்கள் கடும்போக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தவாதிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தாக்குதல்
மேலும், அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை பணத்தில் 4 லட்சம் ரூபாய் குறித்த தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள தரப்பினர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு கூட தயாராகி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், அஹமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மூன்று கைத்துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |