கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்
மன்னாரில் சிறுமியின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபரை இன்று(19) மன்னார் நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில் மரணத்திற்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.
சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொது மக்கள் போராட்டம்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கு, விசேட விசாரணை காவல் குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம், இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்துங்கள், எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அதே நேரம் சிறுமியின் புகைப்படத்தையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் சனிக்கிழமை(17) மதியம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் குறித்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |