விமல் வீரவன்ச இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் : கடுமையாக சாடிய சபா குகதாஸ்
கடந்த காலங்களில் அதி உச்சமாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய வீரவன்ச (Wimal Weerawansa) மீண்டும் அதனை கையில் எடுத்துள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Gugadhas) கடுமையாக சாடியுள்ளார்.
இச்செயற்பாடு வீரவன்சவின் இயலாமையையும் சிங்கள இனவாதத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மாவீரர் நாள்
அதாவது வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உட்பட எந்த நினைவேந்தலுக்கும் எதிர்காலத்தில் அனுமதிக்க கூடாது என எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சபா குகதாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் நாள் என்பது தமிழர்களின் தேசிய எழுச்சி நாள் ஆகும்.
அடக்கு முறை
இதனை தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் தடைகள் போட்டாலும் மக்கள் நினைவு கொள்வதை தடுக்க முடியாது.
யுத்தம் மௌனித்த பின்னர் கடந்த கால ஆட்சியாளரின் மிக கோரமான அடக்கு முறைகளை எதிர் கொண்டதுடன் தமிழர் தாயகம் நினைவேந்தல்களை நடாத்த பின் வாங்கியதில்லை.
தென்னிலங்கையில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது இன அழிப்பை எதிர் கொண்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த தமிழர்களின் மனங்கள் எப்படி குமுறும் என்பதை வீரவன்ச போன்ற இனவாதிகள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை.
தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் நினைவேந்தல்களை இனவாத நோக்கில் பார்ப்பதுடன் சிங்கள மக்களை எதிராக தூண்டும் குரோத செயற்பாடு மேலோங்குமாயின் நாடு அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ முன்னோக்கி செல்ல ஒரு போதும் வாய்ப்பில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |