விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தார்களாம் ? ஜனாதிபதி மற்றும் பிரதமரை புகழ்பாடிய அமைச்சர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த காலத்தில் மிகவும் சிக்கலான பல சவால்களை வெற்றிகொள்ள முடிந்தது என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததோடு மாத்திரமன்றி, சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்க முடியாத வகையில் இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செத்சிறிபாய மூன்றாவது கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கம் எப்.சி.ஐ.டி என்ற சட்டவிரோத பொலிஸ் பிரிவைப் பயன்படுத்தி அரச ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அவர்கள் பணிபுரிய முடியாத சூழ்நிலையொன்றை உருவாக்கியது.
எனினும் அவர்கள் எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி செயற்திறன்மிக்க வகையில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சூழ்நிலையை நாம் தற்போது ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றோம். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டதைப் போன்று புதிய கட்டடத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும்போது சமூகவலைத்தளங்களில் அதுதொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது வெறுமனே கட்டடமொன்றை நிர்மாணிப்பது மாத்திரமல்ல.
அதன் பின்னர் அங்கு பணிபுரியும் அரசசேவையாளர்களுக்கான வசதிகள் உயரும் போது மக்கள் பெறும் சேவையின் தரமும் செயற்திறனும் மேம்படும். அது நாட்டின் பொருளாதாரத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் எதிர்கொள்வதற்கு மிகவும் சிக்கலான சவால்களைக்கூட மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் வெற்றிகொள்ள முடிந்தமை தொடர்பில் நாட்டுமக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததோடு மாத்திரமன்றி, கடந்த காலத்தில் இடம்பெற்ற சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்க முடியாத வகையில் இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோன்று போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முறியடிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலொன்றை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.