மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம்! இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் கவலை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தொடர்ந்தும் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளதுடன் அவரின் இந்த செயல் தம்மை மனரீதியாக பாதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது என்றும் 39 உறுப்பினர்களும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை எதிர்க்கும் போதெல்லாம் சபாநாயகரால் அவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறார்கள்.
20 வது திருத்தம் தொடர்பான விவாதத்தின் முடிவில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லட்சுமன் கிரியெல்லவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் நிலையியற் கட்டளையின் கீழ் கேள்விகளை எழுப்பும்போதெல்லாம் அந்த உரிமையை சபாநாயகர் தொடர்ந்து குறைத்து வருகிறார்.
இந்தநிலையில் சபையில் உள்ள அனைத்து 225 உறுப்பினர்களுக்கும் தலைவராக இருக்கும் சபாநாயகர் தமது பதவியின் கௌரவத்தை பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எதிர்க்கட்சியின் கடிதத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.