ஒருபோதும் தப்ப முடியாது மைத்திரி -ரணில் அரசு அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தப்ப முடியாது என்றும் இது அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இன்று (13) நாடாளுமன்றத்தில் வாய்மூல பதிலை எதிர்பார்த்து வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் , “…ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கேள்வியை நான் கேட்கிறேன். வரும் ஏப்ரலில் ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இப்படி கேள்வி கேட்கும் போது இன்னும் 2 வாரம் அவகாசம் கேட்கிறார்கள். இன்று கேள்விகள் கேட்க வேண்டிய நாள். இன்று அதிபரும் உங்கள் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர். மறுபுறம், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்துவதற்கு உங்களின் ஆளும் கட்சி இதற்கு முன்னைய காலங்களில் மிகத் தெளிவாகப் பயன்படுத்தியது.
ரணில் விக்ரமசிங்க உங்களின் பக்கம் வந்து பத்திரமாக மலையேறியுள்ளதாலும், மைத்திரிபால சிறிசேன அவருக்கு அரசியல் எதிரியாகி வருவதாலும் இந்தப் பிரச்சினை மேலும் நீடிக்குமா என்பது புரியவில்லை..” என தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், “.ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் இடம்பெற்ற போது நாட்டின் அதிபர், பாதுகாப்பு அமைச்சர், தளபதி, காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோர் ஒருவரே என்பது ஆரம்பம் முதல் எங்களின் நிலைப்பாடாகும். அதுதான் அதிபர் மைத்திரிபால சிறிசேன.
அப்பொழுதெல்லாம் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருக்கலாம் என்று அன்று நினைக்கவும் இல்லை, இன்று நினைப்பதுமில்லை. அதுதான் எங்களின் நிலைப்பாடு…” என தெரிவித்தார்.