இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா......
இலங்கையில் போர் முடிந்து பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் இன்னும் போர் முடியவில்லை என்றே தோன்றுகிறது.
களத்தில் துப்பாக்கிகள் அமைதியாகிவிட்டாலும், அடையாளம், நினைவு, மொழி, வரலாறு ஆகியவற்றைச் சுற்றிய மோதல்கள் புதிய வடிவில் சமூக வலைத்தளங்களில் நடந்துகொண்டே இருக்கின்றன.
அண்மையில் மைத்ரேயி ராமகிருஷ்ணனைச் சுற்றி எழுந்த சர்ச்சையும் தியாக தீபம் திலீபனின் நினைவு தொடர்பான எதிர்வினைகளும் இதற்கான இரண்டு வேறுபட்ட உதாரணங்களாகியுள்ளன.
புலம்பெயர் தலைமுறை மைத்ரேயி
கனேடிய நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் தன்னை ஈழத் தமிழராக அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்வினைகள் உருவாகின.
குறிப்பாக சில சிங்கள தேசியவாத சமூக வலைத்தளப் பக்கங்கள் அவருக்கு எதிராகப் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும், அவர் நடித்த Best of the Best திரைப்படத்துக்கு ஒரு நட்சத்திர மதிப்பீடு வழங்குமாறு பின்தொடர்பாளர்களைக் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

சில பதிவுகளில் திரைப்படத்தைப் பார்க்காமலேயே எதிர்மறை மதிப்பீடுகளை வழங்குமாறு கோரப்பட்டதுடன், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விமர்சனங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களும் பகிரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நடிகை தனது இன மற்றும் பண்பாட்டு அடையாளத்தை எவ்வாறு வரையறுக்கிறார் என்பதிலிருந்து தொடங்கிய விவாதம், திரைப்படத்தையே குறிவைக்கும் இணையப் பிரசாரமாக மாறியிருப்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம்.
கருத்துடன் உடன்படாமை வேறு; ஒருவரின் இன அடையாளத்தை மையப்படுத்தி அவரை இழிவுபடுத்துவது வேறு. சமூக வலைத்தளங்கள் இந்த இரண்டுக்கும் இடையிலான எல்லையை அடிக்கடி அழித்துவிடுகின்றன.
சிங்களவர்கள் நேசித்த திலீபன்
இதே காலப்பகுதியில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தலைச் சுற்றியும் சமூக வலைத்தளங்களில் கடுமையான இன அடையாள மோதல்கள் இடம்பெற்றன.
திலீபன் நினைவு நிகழ்வுகள் வடக்கில் இடம்பெற்ற நிலையில், நல்லூரில் நிறுவப்பட்டிருந்த அவரது சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட சம்பவம் தமிழ் சமூகத்தில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.
தமிழ் சிவில் சமூக அமைப்பும் இதனை நினைவுகூரும் உரிமை தொடர்பான பிரச்சினையாக முன்வைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தனைக்கும் திலீபன் அவர்களை போற்றுகின்ற நேசிக்கின்ற சிங்கள மக்கள், கலைஞர்களும் உள்ளனர்.
இங்கு இன்னொரு ஆபத்தான போக்கும் வெளிப்பட்டது. திலீபன் நினைவேந்தலில் அமைச்சர் ஒருவர் கலந்துகொண்டதாகக் காட்டும் போலிப்படமும், பிரதி அமைச்சர் ஒருவர் திலீபனைப் புகழ்ந்து பேசியதாகக் கூறும் போலிச் செய்தி அட்டையும் சமூக வலைத்தளங்களில் பரவின.
விசாரணையில் அமைச்சர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்றும், படம் திருத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல் பிரதி அமைச்சருக்கு உரியதாகப் பரப்பப்பட்ட கருத்தும் போலியானது என உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் தெரிவித்தது.
திட்டமிட்ட அரசியல் வேலை
இதுதான் இன்றைய புதிய களம். உண்மையான சம்பவம் ஒன்றுடன் பொய்யான படம் ஒன்று இணைக்கப்படுகிறது. உண்மையான கருத்துடன் இனவாத நோக்கு கொண்ட செய்திகள் திரிவுபடுத்தப்பட்டு இணைக்கப்படுகிறது.
ஒருவரின் அடையாளம் ஒரு அரசியல் ஆயுதமாக்கப்படுகிறது. சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானவர்களைச் சென்றடையும் பதிவுகள், பல ஆண்டுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய சமூகப் புரிதலை ஒரே நாளில் பின்னோக்கித் தள்ளுகின்றன.

திலீபனை ஒருவர் எவ்வாறு மதிப்பிடுகிறார் என்பது வரலாறு, அரசியல் மற்றும் தனிப்பட்ட நிலைப்பாடுகளுடன் தொடர்புடையது. அவரை விமர்சிக்கும் உரிமையும், நினைவுகூரும் உரிமையும் ஜனநாயக சமூகத்தில் விவாதிக்கப்படக்கூடியவை.
ஆனால் அந்த விவாதம் இனவெறுப்பாக மாறும் இடத்தில் பிரச்சினை வேறு வடிவம் பெறுகிறது. அதேபோல் மைத்ரேயியின் அடையாளத்துடன் ஒருவர் உடன்படாமல் இருக்கலாம்.
ஆனால் அதற்காக ஒரு முழு இனத்தையே இழிவுபடுத்தும் மொழி பயன்படுத்தப்படுவது கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் நியாயப்படுத்த முடியாதது.
இலங்கை எங்கு நிற்கிறது
இன்று சமூக வலைத்தளங்களில் நடைபெறுவது வெறுமனே கருத்துப் பரிமாற்றமாக இல்லாமல், அது நினைவுகளுக்கான போட்டியாகவும் மாறியுள்ளது.
யார் தியாகி, யார் பயங்கரவாதி, யாருடைய வலி உண்மை, யாருடைய வரலாறு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பவற்றைத் தீர்மானிக்கும் முயற்சிகளும் அதில் இடம்பெறுகின்றன.

ஒரு தலைமுறை போரில் நேரடியாகச் சந்தித்த கேள்விகள், அடுத்த தலைமுறையின் கைகளில் கையடக்கத் தொலைபேசிகளாக மாறியிருக்கின்றன. இதனால்தான் இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா? என்ற கேள்வி எழுகிறது.
ஆயுதப் போர் நடக்கவில்லை என்பதால் சமூக மோதல் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் ஒவ்வொரு கடுமையான கருத்தையும் போரின் தொடர்ச்சி என்று கூறுவதும் சரியல்ல.
அவற்றில் கருத்து வேறுபாடுகளும் உள்ளன; அரசியல் பிரசாரங்களும் உள்ளன; திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரங்களும் உள்ளன. போலிச் செய்திகளும் உள்ளன. இவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதே இன்றைய அவசியம்.
போரின் காயங்களை ஆற்ற வேண்டிய சமூகத்தில், சமூக வலைத்தளங்கள் அந்தக் காயங்களை மீண்டும் திறக்கும் இடமாக மாறக்கூடாது.
மைத்ரேயி ராமகிருஷ்ணனைச் சுற்றிய சர்ச்சையும் திலீபன் நினைவேந்தலைச் சுற்றிய இணையப் பதிவுகளும், போர் முடிந்த பின்னரும் இன அடையாளம் குறித்த பதற்றங்கள் எவ்வாறு புதிய தொழில்நுட்பங்களின் வழியாகப் பரவுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.
போர் முடிந்திருக்கலாம் ஆனால் அதன் நினைவுகள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. அந்த நினைவுகளை வெறுப்பாக மாற்றுவதன் வாயிலாக இலங்கையின் அரசியலும் இரண்டு இனங்களுக்கு இடையிலான உறவும் எங்கு நிற்கிறது என்ற கசப்பான உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |