இலங்கையை சக்தி வாய்ந்த நாடாக மாற்ற ராஜபக்சர்கள் போராட்டம்
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கிச் செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்தார்.
தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (12) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவால் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதனை குறிக்கும் வகையிலான நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாணப் பணிகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழே முன்னெடுத்துச் சென்று இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படும் முனையத்தின் முழு நீளம் 1320 மீட்டராகும்.
இப்பணிகள் மூன்று கட்டங்களின் கீழ் எதிர்வரும் 2024 ஜுலை மாதமளவில் நிறைவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.