மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதிக்கு நேர்ந்த கதி
கெஸ்பேவ-கொழும்பு வீதியின் மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்தொன்றின் மீது வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் தனியார் சொகுசுப் பேருந்து சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்தைப் பின்தொடர்ந்து வந்த தனியார் பேருந்து, கெஸ்பேவ சந்தியிலிருந்து முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறும் ஒலிப்பானை ஒலித்தவாறும் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இழப்பு
பின்னர், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, அதன் முன்புற வலது பக்கத்தில் தனியார் பேருந்து மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மெட்ரோ பேருந்தின் வலது பக்கப் பின்பார்வைக் கண்ணாடியும் அதற்குக் கீழே அமைந்துள்ள கண்ணாடியும் சேதமடைந்துள்ளன.
இதனால் ஏற்பட்ட இழப்பு 342,000 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சிசிடிவியில் பதிவு
இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 44 வயதுடைய சாரதி இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |