வடக்கு கல்வியின் தற்போதைய நிலை - பிரதமர் ஹரிணி அதிர்ச்சி தகவல்
வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை என்பது நாடு முழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக உள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவிற்கு (Vavuniya) நேற்று (20.4.2025) விஜயம் செய்த அவர் உக்கிளாங்குளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயந்து நடுங்கும் அரசியல்வாதிகள்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதரத்தை கிராம மட்டத்தில் இருந்து அபிவிருத்தி செய்யவேண்டும். நாட்டையும் அபிவிருத்தி செய்யவேண்டும்.
எங்கள் பிள்ளைகளின் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். கிராமங்களில் உள்ள சிறிய வீதிகள் திருத்தப்பட வேண்டியிருக்கிறது.
இந்த வவுனியா மாவட்டம் பெரிய நகரமாக உள்ளது. அதன் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யவேண்டும். எதிர்காலத்தில் உல்லாசபிரயாணிகளை இங்கு வர வைக்க வேண்டிய முறைமையை நாம் உருவாக்குவோம்.
எனவே அரசாங்கத்திற்கு பொருத்தமான எங்களுடன் இணைந்து செயற்ப்படக்கூடிய சபைகளை மக்கள் உருவாக்கவேண்டும். அதன்மூலமே கிராமங்களுக்கும் விரைவான அபிவிருத்தியை கொண்டுவரமுடியும்.
கடந்தகாலங்களில் தோல்வியடைந்த. அரசியல்வாதிகள் தற்போது பயந்து நடுங்கிகொண்டிருக்கின்றனர். வழமையாக தாங்கள் கைக்கொண்டது போல மீண்டும் இனவாதத்தை கைகளில் எடுத்துள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
எங்களுக்கு செய்வதற்கு பல வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. இந்த வன்னி பிரதேசத்திற்கு கல்வி எவளவு முக்கியத்துவமானது என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன்.
அரசு என்ற வகையில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றோம். வடபகுதி மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள் என்பதை நான் அறிவேன்.
ஆனால் வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை வளப்பற்றாக்குறை என்பன நாடுமுழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக உள்ளது.
சிறுவர்கள் பாடசாலைகல்வியில் அலட்சியமான போக்கை கடைப்பிடிக்கின்றமை வேதனையான விடயமாக உள்ளது.போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது. இதில் மிகுந்த கவனத்தை நாம் செலுத்த வேண்டும்.
புதிய கல்விசீர் சிருத்தம்
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நாம் புதிய கல்விசீர் சிருத்தம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
கல்வியியல் கல்லூரிகளை விருத்தி செய்து அதில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளோம்.
ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியான விடயங்களை உள்ளடக்க எதிர்பார்த்துள்ளோம். இதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டுநிற்கின் றோம்.
மக்கள் எதிர்பார்க்கின்ற சமாதானத்தையும் ஒற்றுமையுடனும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டை கையளிப்பதற்கு நாங்கள் அனைவரும் தயாராக வேண்டும். என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
