அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்
புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, காயமடைந்த அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் குறித்து அமைச்சர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில், நாடாளுமன்றத்தில் விரிவான உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையால், அலுவலக கட்டடம், ஆவணக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், எந்தவித ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள முடியாது போயுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும் சிறைக்கைதிகள் 19 பேருமாக மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |