காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட அநுர தரப்பிடம் நீதியை எதிர்பார்க்கலாமா...
யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகிற இந்நாட்களில் ஜேவிபியின் லலித்குமார் என்றொரு இளைஞரின் நினைவுகள் வந்து செல்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிக்காக காத்திருக்கும் நிலையில், அனுராவிடமும் பதில்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தருணத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட ஜேவிபியினர் அதற்கு காரணமாக இருந்தமையும் ஒரு குருதி படிந்த உண்மை வரலாறு ஆகும்.
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியப் பொதுச்செயலாளராக இருந்த சமயத்தில் நிகழ்ந்த அனுபவங்கள் குறித்து சுமார் 12ஆண்டுகளுக்கு முன்னர் ஈழப் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரையின் அம்சங்களுடன் இன்றைய நிலையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களையும் இப் பத்தியின் வாயிலாக எடுத்துரைக்கலாம் என எண்ணுகிறேன்.
அச்சம் மிகுந்த யாழ் நகர்
2011ஆம் ஆண்டு காலப்பகுதி. எப்பொழுதும் அச்சத்தையும் பதற்றத்தையும் முழுப் பிராந்தியத்திலும் பெய்து கொண்டிருக்கிற இயல்பற்ற யாழ் நகரத்தில் எனது அறைக்கு வந்து சேருகையில் இரவாகியிருந்தது. அப்பொழுதுதான் பல்கலைக்கழக நண்பன் நிமல்ராஜ் தொலைபேசியில் அழைத்து லலித்குமார் மர்மமாக கடத்தப்பட்டதாகச் சொன்னான்.
அச்சமும் பயங்கரமும் கொண்ட யாழ் நகரத்தில் இப்படியான செய்திகள் மிகவும் சாதாரணமாக வந்து வாழ்வை கலக்கி விடுவது வழமையானது. லலிதகுமார் தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தவர்.
எங்கள் நகரம் எவ்வளவு பயங்கரமானது? எங்கள் நகரத்தில் என்ன நடக்கின்றன என்பது லலித்குமாரிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து சில நாட்களில் லலித்குமார் எனக்கு அறிமுகமானார்.
அன்றைய நாட்களில் தடுப்புமுகாங்களிலிருந்து மாணவர்களை விடுவிப்பது தொடர்பில் பொதுச் செயலாளராக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பணிகளில் மூழ்கியிருந்த ஒரு தருணத்தில் லித்குமாரை என்னுடன் மாணவர் ஒன்றியத் தலைவராக என்னுடன் இருந்த பிரசன்னா அறிமுகப்படுத்தினான்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவன் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி என்றும் பிரசன்னா லலித்குமாரை அறிமுகப்படுத்தினான். லலித்குமார் ஓரளவு தமிழில் பேசினார். நமது மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பினார். மாணவர் ஒன்றிய பொதுக்கலந்துரையாடல் அரங்கில் மாணவப் பிரதிநிதிகளுடன் சந்திப்பை ஒன்றையும் ஒழுங்கு செய்து கொடுத்தோம்.
ஜேவிபி உறுப்பினரா லலித்குமார்?
அப்பொழுது யுத்தம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. ஏ-9 பாதை திறக்கப்படாத நிலையில் லலித்குமார் கப்பல் வழியாக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
யுத்தம் முடிந்த நிலையில் தடுப்புமுகாங்களிருக்கும் மக்களைக் குறித்தும் ஈழத் தமிழர்களின் அரசியல் குறித்தும் உலகெங்கிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. நாடெங்கிலும் ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்க விரும்பிதாக குறிப்பிட்ட லலித்குமார் தமிழ் இனத்தின் துயரங்களைக் குறித்து தடுப்புமுகாம் மக்களின் விடுதலை குறித்து குரல் கொடுக்கும் போராட்டங்களை ஒழுங்கு செய்யவே வந்ததாக குறிப்பிட்டார்.
லலித்குமாருடன் நாம் நடத்திய முதல் உரையாடலிருந்தே நமது முரண்கள் எட்டத் தொடங்கியிருந்தன. தமிழ் மக்களுக்காக பாராளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸநாயக்க ஆற்றிய உரையின் புத்தக வடிவம், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரிவின் சில்வா ஆற்றிய உரையின் புத்தக வடிவம் என்பவற்றை வாசிக்கும்படி லலித்குமார் தந்தார்.
லலித்குமாரின் பேச்சிற்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. அவை மக்கள் விடுதலை முன்னணி பற்றி ஆண்டாண்டு காலமாக நமக்கிருந்த அதே வெறுப்பை ஏற்படுத்தியது.
போர் வெற்றிப் பேச்சால் அதிரப் பண்ணிய அனுர
பயங்கரவாதத்தை அழிக்க மக்கள் விடுதலை முன்னணியே அரசுக்கு ஆனையிட்டது என்பதை அழுத்துச் சொல்லி பாராளுமன்றத்தை அநுரகுமார திஸநாயக்கவும் ரிவின் சில்வாவும் அதிரப் பண்ணிய கதைகள் அந்த உரைதொகுப்புக்களில் இருந்தன.
முகாங்களை திறந்து மக்களை வெளியில் விடுங்கள் என்ற சமகால கோரிக்கையை அரசியலாக்கி ஈழத் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் மக்கள் விடுதலை முன்னணி என்கிற ஜே.வி.பி மூடி மறைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு இனப்பிரச்சினை இருப்பதையோ தமிழ் இனப்படுகொலை நடந்திருப்பதைப் பற்றியோ பேசாமல் முகாங்களிருந்து மக்களை விடுவி! என்ற கோசத்திற்குள் மாத்திரம் நின்றது.
அன்றைய காலத்தில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டு முகாங்களிலில் அடைக்கப்பட்ட மூன்றரை லட்சம் மக்களின் பிரச்சினைதான் ஈழத்து மக்களின் பெரும் பிரச்சினையாக உலகத்தின் பெருந்துயரமாக இருந்தது.
பயரங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டது என்ற இலங்கை ஜனாதிபதியின் வசனங்களில்தான் தமிழ் மக்களின் போராட்டமும் கோரிக்கையும் சிதைக்கப்பட்டது. ஜே.வி.பியும் அப்படித்தான் கருதியது. தமிழர்களுக்கு என்றொரு தாயகம் இருப்பதை தமிழர்களின் பிரச்சினை இனப்பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டதில்லை.
ஈழத் தமிழ் மக்களுக்கு தனித்துவமான அடையாளம், வாழ்வு, பண்பாடு இருக்கின்றன என்பதையோ அவர்கள் அந்த தனித்துவத்தில் வாழ விரும்புகிறார்கள் என்பதையோ ஏற்றுக் கொள்ளாமல் இலங்கையர் என்ற அடையாளத்திற்குள் ஈழத்து மக்களை கரைக்கப் பார்த்தது. அதுதானே சிங்களப் பேரினவாத அரசியல். அந்த அரசியலுக்கு எதிராகத்தானே பல ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள்.
பேரினவாதக் கொள்கையுடன் வந்த ஜே.வி.பி
முகாங்களில் உள்ள மக்களுக்காகவும் முன்னாள் போராளிகளுக்காகவும் மீள்குடியேற்றத்திற்காகவும் மக்கள் விடுதலை முன்னணியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் போராட்டங்களை நடத்த விரும்புவதாகவும் அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் லலித் கேட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிகவும் ஆபத்தான கட்டங்களில் ஈழத்து மக்களின் மீள்குடியேற்றத்திற்காவும் வாழ்வுரிமைக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து எந்த அரசியலின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுக்க முடியும் என்பதே நமது கேள்வியாக இருந்தது? யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஈழத் தமிழ் மக்களின் விடுதலையை வாழ்வுரிமையை தமது இலட்சியமாக்கி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அறிவியல் தளத்தில் ஆதரிக்கும் கல்விச் சமூகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்களுக்கு மீள்குடியேற்றத்தை தவிர எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றும் தமிழர்களின் தாயகத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்படலாம் என்பது போன்றதுமான கொள்கைகளின் ஊடாக சிங்களப் பேரினவாத அரசியலுக்கு களம் அமைக்கும் ஜே.வி.பியுடன் எப்படி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து செயற்பட இயலும்?
ஜேவிபி தலைவர்களுடன் சந்திப்பு
அந்த கேள்விகளுடன் லலித்குமாரின் நட்பும் தொடர்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. லலித்குமார் மக்கள் விடுதலையின் உயர் மட்ட உறுப்பினர்கள் பலருடன் சந்திப்புக்களை ஏற்பாடுகளை செய்தார். விஜிதஹேரத், சந்திரசேகரன், அநுரகுமார திஸ்ஸநாயக்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் உரையாடினார்கள்.
அவர்களிடத்தில் புலிகள் ஈழத் தமிழர்களிடத்தில் எப்படிச் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பது பற்றியும் அத்தகைய இடத்தை ஜே.வி.பி பெற இயலுமா? எனவும் எதிர்பார்ப்பு இருந்தது.
புலிகளின் வழிமுறைகள் பலவற்றைக் குறித்து கேட்டுக் கொண்டார்கள். புலிகளை பிரிவினைவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்று ஜே.வி.பி சொல்லியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனவாத அமைப்பு என்றது. தம்மை இடதுசாரிக் கட்சி என்றும் தாம் இடதுசாரியம் பேசுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
அமரிக்கத் தலையீடு, இந்தியத் தலையீடு, அந்தியத் தலையீடு என்று இலங்கையின் இறையாண்மை குறித்து தொடர்ந்தும் கூச்சலிடும் ஜே.வி.பி பேசும் இடதுசாரியம் வேடிக்கையானது. இன்று ஈழத் தமிழர்களுக்கு பேரழிவும் பெருந்துயரும் ஏற்பட்டமைக்கு ஜே.வி.பி முக்கிய காரணியாக இருக்கிறது.
சந்திரிகா அரசிற்கும், மகிந்த அரசிற்கும் அவர்களின் யுத்த நடவடிக்கைகளிற்கும் பெரும் ஆதரவு வழங்கி தொடர்ந்தும் ஊக்குவித்த ஜே.வி.பி யுத்த வெற்றியை சாதாரண சிங்கள மக்களைப்போல சிங்கள அரசைப் போல கொண்டாடும் கட்சி.
பயங்கரவாதிகளை அழியுங்கள், பிரிவினைவாதிகளுடனான சமாதான ஒப்பந்ததத்தை கிழித்தெறியங்கள் என்று பேசி யுத்தத்திற்கு வழி சமைத்த ஜே.வி.பியின் யுத்த வெறியை பேரிழிவுக்கு முகம் கொடுத்த ஈழத் தமிழ் இனம் எப்படி மறப்பது? இத்தனை அழிவின் பிறகும் போராட்டத்தின் பிறகு ஏன் தமிழருக்கான நீதியை ஜே.பி.வி மறுக்கிறது?
ஜேவிபியின் இரட்டை முகம்
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் விளையாட்டு போலவே ஜே.வி.பியின் செயற்பாடு இருக்கிறது. இந்த கருத்துக்களை தொடர்ந்து லலித்குமாருடன் தெரிவித்துக் கொண்டிருந்தேன். என்னைப்போல பல மாணவர்களும் இப்படித்தான் லலித்குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சந்திரசேகரன் போன்ற ஜே.வி.பியின் உயர் மட்டத்தினர் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். ஷேபாசக்தி என்னுடன் நடத்திய நேர்காணலில் ஜே.வி.பி மீதான எனது கருத்தை பார்வையைப் பற்றி சொல்லியிருந்தேன்.
அதன் பின்னர் காணாமல் போனவர்களுக்காக ஜே.வி.பி யாழ் நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய பொழுதும் காணாமல் போதல்களுக்கு ஜே.வி.பிதான் பொறுப்பு என்று எழுதியிருந்தேன். அதன் பிறகு லலித்குமாரை கிளிநொச்சி நகரத்தில் வைத்துப் பார்த்தேன். அது ஒரு தேர்தல் காலம்.
ஜே.வி.பியின் தேர்தல் பணிகளில் லலித்குமார் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கடும் கோபத்துன் பேசினார். அவரது முகமும் கண்களும் சிவந்து போயிற்று. லலித்குமாரிடம் மிக நிதானமாகச் சொன்னேன். உங்கள் அரசியலால் நாம் வாழ்க்கையை உயிர்கைள இழந்திருக்கிறோம்.
பேரழிவுக்கு முகம் கொடுத்திருக்கிறோம் அதன் பிறகும் நீங்கள் நீதியற்று செய்யும் இந்த அரசியலை எப்படி ஏற்பது என்று. எனக்கு இப்பொழுது பேச நேரமில்லை கட்சிப் பணிகள் உள்ளன என்று சொல்லி லலித் சென்றுவிட்டார்.
சிங்கள கவிஞருடன் சந்திப்பு
கெலும் நவரத்னே என்ற இளம் சிங்களக் கவிஞர் எனது கவிதைகளை தனது இதழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். ஈழம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அது சாத்தியமா? என்று அவர் என்னிடம் கேட்டார். என்னுடன் நிறைய பேச விரும்புவதாக குறிப்பிட்ட அவர் ஒர் உரையாடலைச் செய்யவும் விரும்பினார்.
இரண்டு இனங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையிலான ஒரு உரையாடல்; என்பது உணர்வுகளை கருத்தை பார்வையை பகிர உதவும் என்ற அடிப்படையில் ஒரு நாளையும் குறித்தோம். எங்கள் உரையாடலில் லலித்குமார்தான் மொழிபெயர்பாளராக ஒழுங்கு செய்யப்பட்டார். லலித்குமார் சிங்களப் படைப்பாளிகள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் பலருடன் பேசும் பொழுது என்னுடன் மொழிபெயர்ப்பாளராக உதவியிருக்கிறார்.
லலித்குமாரின் தந்தை தமிழர். தாயார் சிங்களவர். அவர்களின் சொந்த வாழிடம் கொழும்பு. தெற்கிற்கு மேற்கொண்ட பல பயணங்களில் அவர் மொழிபெயர்பாளராக உதவியிருந்தார். இந்த கவிஞர் கெலும் நவரத்னேயுடன் நடத்த இருந்த உரையாடலை சிங்களத்திலும் தமிழிலும் வெளியிட லலித்குமாரின் மொழிபெயர்ப்பு உதவும் என்று இருவரும் தீர்மானித்திருந்தோம். துரதிஷ்டவசமாக அந்த உரையாடல் இடம்பெறாமல் போயிற்று. மீண்டும் அந்த உரையாடலை நடத்த இருந்த தருணத்தில்தான் லலித்குமார் கடத்தப்பட்டிருக்கிறார்.
முதலில் லலித்குமாருடன் உரையாட இருந்த காலத்தில் அவர் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்தார். இரண்டாவதுமுறை உரையாடல் சாத்தியமாக இருக்கையில் அவர் ஜே.வி.பியிலிருந்து பிரிந்து மக்கள் போராட்ட இயக்கம் என்ற கிளர்ச்சிக் குழுவில் இணைந்திருந்தார்.
மக்கள் போராட்ட இயக்கம் ஜே.வி.பியிலிருந்து வேறுபட்டு தமிழர்களின் பிரச்சினையை அணுகுவதாக குறிப்பிட்டது. தமிழர்களின் தாயகம், சுயநிர்நண உரிமை, தனித்துவம் என்பவற்றை ஏற்றுக் கொண்டதாக கூறியிருந்தது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் ஜே.விபியின் அரசியலின் தோல்வியால் மக்கள் போராட்ட இயக்கம் என்ற கிளர்ச்சிக் குழு உருவாகியிருக்கலாம்.
குகன் லலித் காணாமல் ஆக்கல்
கிளிர்ச்சிக் குழு யாழ் நகரத்தில் காணாமல் போனவர்களை மீட்பதற்கு குரல் கொடுக்கும் வகையில் பேரணி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. உறவுகளை இழந்த ஆயிரக்கணக்கானர்கள் கண்ணீருடன் யாழ் நகரில் திரண்டார்கள்.
அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த தயாரான பொழுது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள் போராட்ட இக்கத்தின் ஆதரவாளர் குகன் என்பவருடன் யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வைத்து லலித்குமார் கடத்தப்பட்டார். இராணுவத்தினரே லலித்குமாரை கடத்தியுள்ளனர் என்று மக்கள் போராட்ட இயக்கம் குறிப்பிட்டது.
இதே இராணுவமே கடந்த பல வருடங்களாக எங்கள் நகரத்தின் இளையவர்களைக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறது. செம்மணிப் படுகொலைகளை உருவாக்கியது. கிருசாந்திக் கொலைகளை நடத்தியது.
காணாமல் போனவர்களின் கண்ணீரில் நனையும் நகரத்தில் கண்ணீர் காயும் முன்பாதகவே போராட்டத்தில் ஈடுபட்ட லலித்குமார் கடத்தப்பட்டிருக்கிறார். இன்றைக்கு தேசிய மக்கள் சக்தி எனப் பெயர் மாற்றியிருக்கும் ஜேவிபிக்கு இந்த லலித்குமார் மற்றும் குகன் பெயர்கள்கூட மறந்திருக்கும்.
பேரினவாதத்தின் கொடூர முகம்
காணாமல் போனவர்களுக்காய் குரல் கொடுத்தவர்களையும் காணாமல் போகச் செய்யும் அரசியல் எவ்வளவு துயரமானது? காலம் காலமாக நிகழ்வதுபோலவே இந்தக் கடத்தலையும் அரசின் ஆட்சி நலனுக்காக இராணுவத்தினர் மேற்கொண்டிருக்கின்றனர். நமக்காக போரடியதற்காகவே லலித்குமார் கடத்தப்பட்டார்.
நமது நகரத்தில் போராட்டம் நடத்தியதனாலேயே லலித்குமார் கடத்தப்பட்டார். இதுகூட சிங்களப் பேரினவாத்தின் கொரடூர முகத்தை சிங்கள மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டிய இடமாகும். கடத்தப்பட்ட அந்த தருணதத்திலாவது ஈழத் தமிழர்களின் வலியையும் போராட்டத் தாகத்தையும் லலித் உணர்ந்திருக்கக்கூடும். லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலியகொட போல தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற சிங்களவர்களுக்கும் இதுதான் கதி.
காணாமல்போன லலித்குமாரிற்காய் அவரது தந்தையும் சகோதரிகளும் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு அழுத கண்ணீர் கொழும்பு நகரை நனைத்தது. நமது நகரத்தில் நமக்காக போராடிய தோழர் லலித்குமாரை வீடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுப்பதும் அவருக்கு நடந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும் எங்களது அவசியமான கடமை என்பதை அதனை அந்த நாட்களில் செய்யும் விதமாக ஈழப் பத்திரிகைகளில் இதனை எழுதியிருந்தேன்.
சந்திரிக்கா மற்றும் மகிந்த ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்பட்டு, அவர்கள் முன்னெடுத்த இனவழிப்புக்கு முழு ஆதரவையும் வழங்கித் துணை நின்று, பின்னர் அப்போரினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்து வடக்கு கிழக்கைத் தேர்தல்களில் கைப்பற்றிவிட நினைத்த மக்கள் விடுதலை முன்னணியிடம் வடக்கு கிழக்கு தேசம் எந்த விடயத்திலாவது நீதியை எதிர்பார்க்கலாமா?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 18 April, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
