அமெரிக்க ஒப்பந்தத்திற்கு ஈரான் உச்ச தலைவர் பச்சைக்கொடி!
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துத் தனக்கு மாறுபட்ட கருத்து இருந்தபோதிலும் அதற்குத் தான் ஒப்புதல் அளித்திருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் அரசு ஒளிபரப்பான ஐ.ஆர்.ஐ.பி (IRIB) தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட குறுஞ்செய்தி வடிவிலான அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விரக்தியின் காரணமாகவே இந்த முடிவைக் கொண்டுவருவதற்காகப் பல்வேறு வடிவங்களிலான அழுத்தங்களையும் நெம்புகோல்களையும் பயன்படுத்தினார் எனக் கமேனி குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை அடிப்படை
மேலும் “ஒரு கொள்கை அடிப்படையில் நான் இதில் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தேன்.
இருப்பினும் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவர் என்ற வகையில் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மற்றும் பிற உறுப்பினர்களும் ஈரானிய தேசத்தினதும் எதிர்ப்பு முன்னணியினதும் உரிமைகளைப் பாதுகாப்பதாக எனக்கு அளித்த உறுதிமொழி மற்றும் அதற்கான பொறுப்பை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதன் பின்னணியைக் கருத்திற்கொண்டு நான் இதற்கு அனுமதி அளித்தேன்.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதை ஈரான் இனி நோக்கி இருக்கும்.
அத்துடன் எதிர்காலத்தில் நடத்தப்படக்கூடிய சாத்தியமான நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் எதுவும் எதிரியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகாது” என்றும் அவர் மேலும் சேர்த்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |