கனடாவிற்கு அனுப்புவதாக கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி -வலை வீசப்படும் இலங்கைத் தமிழர்கள்
கனடாவில் வேலை
கனடாவில் வேலை வாங்கி தருவதாக இலட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தமிழர்கள் தொடர்பில் தமிழக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்து சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இலங்கைத்தமிழர்கள்
இலங்கையை சேர்ந்த கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாயினி பிரதீன், பிரதீபன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 இலட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதை தமிழக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (45) என்ற பெண் முக்கிய முகவராக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
