பெருந்தோட்டத் தொழிலாளர்களை வைத்து அரசியல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் போலியான கருத்துகளை சமூகத்தில் விதைத்து, அரசியல் நடத்துவதற்கான முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டுள்ளதாக நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் (M. Rameshwaran) தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை காங்கிரஸ் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சு வெளியிட்டிருந்தது. சம்பள நிர்ணய சபை ஊடாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சம்பள விவகாரம்
இந்நிலையிலேயே இவ்விவகாரத்தை தொழில் அமைச்சு கையாண்டது, தான் கையாளவில்லை என்ற தொனியில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கருத்தை வைத்து அரசியல் நடத்துவதற்கு எதிரணிகள் முற்படுகின்றன, சம்பள விவகாரம் தொடர்பில் போலியான கருத்துகளை மக்கள் மயப்படுத்தி, மக்களை குழப்பி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குரிய (Ranil Wickremesinghe) வாக்கு வங்கியை உடைப்பதற்குரிய சதி நடவடிக்கையில் எதிரணிகள் ஈடுபட்டுள்ளன.
எனவே, உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் நிச்சயம் சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் என்பதும் மக்களுக்கு புரியும்.
அதனை நாம் நிச்சயம் செய்வோம். தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்காது, கம்பனி சார்பு போக்கை கடைபிடித்த சில எதிரணி அரசியல் வாதிகள், மக்களுக்கு எதுவும் கிடைக்ககூடாது என்ற நோக்கிலேயே குழப்பத்தை விளைவித்து வருகின்றனர்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |