ஐபிஎல்லில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே..!
பலத்த எதிர்பார்ப்புடன் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடக்க வீரர்களாக சகாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார். அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.
எனினும் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தநிலையில், அங்கு மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி முழுமையாக முடியுமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்.
பின்னர், மழை நின்றதை அடுத்து ஈரப்பதமான மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சரியாக நள்ளிரவு 12.10 மணியளவில் சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆனால், பவர் பிளே ஆப் முறைப்படி சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் அடித்த நிலையில், சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய ருதுராஜ் 26 ரன்களும், கான்வே 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ரஹானே 27 ரன்களும், ராயுடு 19 ரன்களும் எடுத்தனர். ராயுடு ஆட்டமிழந்ததை அடுத்து, டோனி களமிறங்கினார்.
12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி ரன் எடுக்காமல் அவுட்டானார். இது சென்னை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக இருந்தது.
தொடர்ந்து, துபே மற்றும் ஜடேஜா களத்தில் இருந்தனர். 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது.
துபே 32 ரன்களும், ஜடேஜா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐபிஎல் 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டாம் இணைப்பு
சென்னை சூப்பர் கிங் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல் இறுதி போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டமையால் சென்னை அணிக்கு தற்போது 15 ஓவர்களுக்கு 171 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முதலாம் இணைப்பு
இன்று ஆரம்பமான ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டியானது மழையால் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெறவிருந்த இறுதிப் போட்டியானது தொடர்ச்சியான மழையால் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இந்தியாவின் ஹகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி ஆரம்பமானது.
சென்னை அணி
முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 214 என்ற இமாலய ஓட்டங்களை குவித்தது.
இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 4 ஓட்டங்கள் அடித்த நிலையில் மழையினால் போட்டியானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.