முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்கள் கைது: வலுக்கும் கண்டனங்கள்!
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12), முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக இன்று (13) கண்டனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான கைது நடவடிக்கைகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், நல்லிணக்கம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் உள்ள போலித்தன்மை புலப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கைது நடவடிக்கை
திருகோணமலை (Trincomalee) - சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “15 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது.
PEARL condemns the arrests of Tamils and the attacks on Tamil memorialization in Trincomalee earlier today. Mullivaikkal Kanji has come to form an integral part of collective remembrance and healing, as Tamils commemorate the brutal genocide by the Sri Lankan govt 15 years ago. https://t.co/bvFubGLYR6
— PEARL Action (@PEARL_Action) May 12, 2024
இலங்கையில் (Sri Lanka) நல்லிணக்கம் தொடர்பான பேச்சுக்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. எனினும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளும் கைது நடவடிக்கைகளும் இன்றும் தொடர்கின்றன.
தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுக்கும் போது காவல்துறையினர் தொடர்ந்தும் அடக்குமுறைகளை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள இராணுவத்தினர் வெசக் பண்டிகைக்கான பானங்களையும் உணவுகளையும் குறித்த பகுதியில் விநியோகித்திருந்தனர். சிறிலங்கா காவல்துறையினரின் பாசாங்குத்தனம் தற்போது நன்கு வெளிப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |