கனடாவில் திறக்கப்பட்ட தமிழினப்படுகொலை நினைவுத்தூபி
கனடா (canada) பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிராம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் நேற்று (10) 4.8 மீற்றர் உயரத்தில் உள்ள குறித்த உருக்கு நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகவும் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை உலகுக்கு கூறும் வகையிலும் குறித்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
நினைவுச்சின்னம்
குறித்த நினைவு சின்னம், அரசியல் பிரபலங்கள் மற்றும் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இது ஒரு வரலாற்றுத் தருணமாக மாறியுள்ளது.
மே 18-ஐ தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய நாடாளுமன்றம் 2022 இல் ஏகமனதான அங்கீகரித்த பின்னணியில் இந்த நினைவுத் தூபி கட்டுமான பணிகளின் நிறைவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுச்சின்னத்தை வடிவமைப்பதற்கு போட்டியில் பல்லாயிரக்கணக்கான வடிவமைப்புகள் வந்தன எனினும் இறுதியில் ஒரு வடிவமைப்பு சில திருத்தங்களுடன் வடிவமைப்பு கனேடிய தமிழர்களின் தேசிய பேரவையால் முன்மொழியப்பட்டு நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால்
இந்த நினைவு சின்னத்தை சுற்றியுள்ள தூண்கள் யாவும் 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு அடையாமாக உள்ளன.
அதன் நடுவில் உள்ள கரங்களுடனான உருக்கு சின்னம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தை நினைவுகொள்ள வைக்கின்றது.
இந்த நினைவுசின்ன நிர்மாணத்தை ஆரம்பம் முதல் எதிர்த்த சிறிலங்கா அரசாங்கம் கனடாவில் உள்ள தனது உயர் ஸ்தானிகராலயம் மூலம் ராஜதந்திர அமுத்தங்கள் மற்றும் மிரட்டல்களை விடுத்ததுடன் இது தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படக்கூடாது எனவும் எச்சரித்திருந்தது.
இனப்படுகொலை நினைவுச்சின்னம் என பெயரிடுவதால் இலங்கையில் நல்லிணக்க செயல்முறை சிதையும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிரும் தற்போது இது திறந்துவைக்கபட்ட வரலாற்று தருணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 18 மணி நேரம் முன்
