உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்: அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை
''தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடி இருக்கின்றது.இலங்கை ஆட்சிப் பீடம்.
இது பெரும் துரதிஷ்டவசமானதாகும்.''என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகித்தவர்கள் சம்பூரில் ஈவு இரக்கமற்ற முறையில் நள்ளிரவில் காவல்துறையினரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட விடயத்தையொட்டி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகும். சர்வதேசத் தரப்புக்கள் ஐ.நா. மனித உரிமைகள் அவையிலேயே திரும்பத் திரும்ப இதனை வலியுறுத்தி வருகின்றன.
நினைவுகூரும் உரிமை
அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கூட, தாம் அதிபராகப் பதவியேற்ற கையோடு, 'மக்கள் தமது உறவுகளை நினைவுகூர உரிமை உண்டு. அது மறுக்கப்பட முடியாதது' என்று கூறினார். பின்னரும் அதை அவர் பல தடவைகள் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் அவையெல்லாம் பேச்சளவில்தான் இருக்கின்றன. அவரின் காவல்துறை கட்டமைப்பு அதற்கு எதிராக - மிக முரட்டுத்தனமாக - தமிழ் மக்களின் ஆன்மாவையே சீண்டிப் பார்க்கும் விதமாக - அடக்குமுறைத் திமிருடன் - இப்படி நடந்து கொள்கின்றது.
இன்னொரு கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) அராஜக ஆட்சியையே இந்தச் செயற்பாடு மூலம் ரணில் விக்ரமசிங்கவும் இங்கு நிலைநிறுத்த முயலுகின்றாரோ என்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது.
அராஜக ஆட்சி
இந்தப் போக்கு அவருக்கும் நல்லதல்ல, இலங்கை நாட்டுக்கும் நல்லதல்ல. 'வினையை விதைத்தால் அதைத்தான் அறுவடை செய்ய வேண்டி இருக்கும்' என்பதை அதிபருக்கும் அவரது காவல்துறைக்கும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
நினைவேந்தல் விடயத்தில் மக்களின் உரிமையை அராஜகம் மூலம் அடக்குவது மக்களை அதற்கு எதிராகக் கிளர்ந்தெழ வைக்கும் விபரீதத்தையே ஏற்படுத்தும். இதையும் ஆட்சிப்பீடத்துக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகின்றோம்." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |