முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு தொடர்பில் வியாழேந்திரன் வெளியிட்டுள்ள தகவல்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டது என்பது கண்டிக்கத்தக்க விடயம் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அப் பணியினை பார்வையிட கரடியனாறு பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட உறவுகள் தமது சொந்தங்களை, உறவினர்களை இழந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள் அம்மாவை இழந்தவர்கள் அப்பாவை இழந்தவர்கள் தமது ஆத்மார்த்தமாக நினைவுகூர்ந்து மேற்கொள்கின்ற விடயம்.
நினைவுத்தூபியை உடைத்த செயற்பாடு என்பது என்னைப் பொறுத்த அளவில் வன்மையாக கண்டிக்கத்தக்க வேண்டிய விடயம். இதை யார் செய்திருந்தாலும் அவர்கள் நிச்சயமாக கைது செய்யப்பட வேண்டும்.
அது சம்மந்தமான விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்க வேண்டும். இது இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவை குழப்புகின்ற அல்லது ஒரு வன்மத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக நான் பார்க்கின்றேன்.
அத்துடன் கிறிஸ்தவ மதகுருமார்களினால் நடுகல் வைக்கப்பட்டது. அது கூட பாதிக்கப்பட்டதாக அறிகிறோம். ஆகவே அந்த விடயம் கூட மிகமிக வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்.
இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது. அவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பிரிவாக இருந்தாலும் இறந்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளை அவர்களின் ஆத்ம சாந்திக்காக வேண்டி பிரார்திப்பதற்கான சகல உரிமையும் உள்ளது.
ஆகவே இந்த செயற்பாடானது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றார்.