வெளிநாட்டு மோகம் காட்டி பல மில்லியன் மோசடி! முன்னாள் மொட்டு உறுப்பினர் அதிரடி கைது
ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சிறலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய இந்த சந்தேக நபர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருமேனியாவின் கட்டுமானத் துறையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 16 நபர்களிடமிருந்து 21.3 மில்லியன் ரூபாயை சந்தேக நபரும் அவரது மனைவியும் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், சந்தேக நபர்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு, பிரதான சந்தேக நபர் ஏற்கனவே ருமேனியாவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு இந்த மோசடியை முன்னெடுத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது கண்டி - ரிக்கில்லகஸ்கடவில் உள்ள தனது வீட்டிற்கு தப்பியோடிய சந்தேகநபர், பின்னர் கடுகன்னாவையில் உள்ள வாடகை வீடு ஒன்றில் மறைந்திருந்த போது அரச புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |