31ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்
திருகோணமலை (Trincomalee) முத்து நகர் விவசாயிகள் விவசாய நில அபகரிப்புக்கு எதிராக 31ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இன்றும் (17) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வழங்கிய இரண்டாம் கட்ட வாக்குறுதிக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் காணிகள் அபகரிப்பு
இலங்கை துறைமுக அதிகார சபையின் காணி எனக் கூறி 352 விவசாய குடும்பங்களை வெளியேற்றி சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தாரை வார்த்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பகுதியில் இரு விவசாய நீர்ப்பாசன குளங்களை மூடி சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கு வழங்கியதால் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தமக்கான சாதகமான தீர்வை பெற்றுத் தராத பட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு மக்கள் போராட்ட முண்ணனி, அகில இலங்கை விவசாய சம்மேளனம் போன்றனவும் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




