குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தியானத்தில் ஈடுபடுவதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து தியானம் செய்யும் அவர், முன்பு இருந்த நாமல் அல்ல என்றும், தற்போது ஆன்மீக ரீதியாக மாற்றமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஞானசார தேரர் விடயத்தில் பல சர்ச்சைகளை கிளப்பியதற்கு அப்பால் தற்போது நாமல் ராஜபக்சவை நோக்கி தனது கருத்துக்களை திருப்பியுள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு அதீத சக்தி
நாமல் ஜனாதிபதியாக முடியாவிட்டாலும், நிச்சயமாக ஆன்மீகத்தின் மிக உயர்ந்த நிலையை அடைவார் என்ற கருத்தையும் குறித்த தேரர் முன்வைத்துள்ளார்.

அரசியல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் அரசியல்வாதி ஒருவர் ஆன்மீக உச்சநிலையை அடையப்போகிறார் என்ற இந்தக் கருத்து, தற்போது அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.
இதனை சில தென்னிலங்கை ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நாமல் ராஜபக்சவுக்கு அதீத சக்தி கிடைக்கப்போவதாகவும் அவர் சிறையை தண்டி வெளியே வருவார் எனவும் அந்த தேரர் கூறுகின்றார்.
அப்படியென்றால் சிறைச்சாலைச் சுவர்களைத் தாண்டி பறக்கும் சக்தி நாமல் ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளதா?
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகள் மற்றும் சிறைச்சாலைச் சட்டங்கள் அனைத்தையும் தாண்டுவதற்கான புதிய வழி ஒன்றைக் அந்த தரப்பு கண்டுபிடித்துவிட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆன்மீக உச்சநிலை
பௌத்த மரபுகளில் சில தியான நிலைகளுடன் தொடர்புபடுத்தப்படும் அதீத சக்திகள் குறித்து பல்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஆகாயத்தில் பறத்தல், சுவர்களைக் கடந்து செல்லுதல் போன்ற அமானுஷ்ய ஆற்றல்கள் பற்றிய விளக்கங்களும் இடம்பெறுகின்றன.
அப்படியானால், நாமல் உண்மையிலேயே ஆன்மீக உச்சநிலையை அடைந்துவிட்டால் , அவருக்கு பிணை கோர சட்டத்தரணிகள் தேவையில்லையா?
சிறைச்சாலைச் சுவர்களைத் தாண்டி ஆகாயத்தில் பறந்து வெளியேறிவிட முடியுமா? இவை இந்தக் கூற்றைச் சுற்றி எழுப்பப்படும் நையாண்டிக் கேள்விகளாக பார்க்கப்படுகிறது.
நாமலின் சந்திர அட்டமம், லக்ன அட்டமம் மற்றும் முற்பிறவிக் கர்ம வினைகளின் பலன்களே அவரது சிறைவாசத்திற்குக் காரணம் என்று கூறப்படுவதாகவும், அவற்றிலிருந்து விடுபட தியானமே ஒரே வழி எனவும் அந்த தேரர் தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், இத்தகைய விளக்கங்கள் சட்ட நடைமுறைகளுக்குப் பதிலாக முன்வைக்கப்படும்போது, அதிகாரம் மிக்கவர்களுக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை உருவாக்கும் முயற்சியாக அவை பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.
புத்தரின் காலத்தில் வாழ்ந்ததாகப் பௌத்த நூல்களில் குறிப்பிடப்படும் ஒருவரான அங்குலிமாலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றத்தை உதாரணமாகக் காட்டி, இன்றைய அரசியல்வாதிகளின் மீதான குற்றச்சாட்டுகளையும் அதே கோணத்தில் பார்க்க வேண்டும் என வலியுறுத்துவது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தக்கூடியது.
பொதுமக்களின் உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டு
சிறையில் இருந்து தியானம் செய்வது அல்லது ஆன்மீக மாற்றத்தைப் பற்றிப் பேசுவது மட்டும், ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கோ, சட்டப் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கோ ஆதாரமாகாது.

பொது நிதி முறைகேடுகள், தேசிய வளங்களின் தவறான பயன்பாடு மற்றும் அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தால், அவை ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதேபோல், ஒருவரின் ஆன்மீக வாழ்க்கை குறித்த கூற்றுகளையும் அரசியல் பிரசாரத்தையும் ஒன்றாகக் கலப்பது, மதத்தின் உண்மையான நோக்கத்தை அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தும் முயற்சியா என்ற விமர்சனத்தையும் உருவாக்குகிறது.
அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் அல்ல.
அதே நேரத்தில், மத நம்பிக்கைகள், ஜோதிடம் அல்லது ஆன்மீகப் பயிற்சிகள் எதுவாக இருந்தாலும், அவை சட்டத்திற்கு மாற்றாக அமைய முடியாது.
ஒருவர் தியானம் செய்கிறாரா, ஆன்மீக மாற்றத்தை அடைகிறாரா என்பது தனிப்பட்ட விடயமாக இருக்கலாம்.
ஆனால், அரச நிதி மற்றும் பொதுமக்களின் உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவற்றுக்கான பதில் சட்டத்தின் வழியாகவே வழங்கப்பட வேண்டும்.
ஆன்மீக உயர்வைப் பற்றிய கூற்றுகள் அரசியல் விளம்பரமாக மாறக்கூடாது. நீதியும் சட்டமும் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும் என்பதே இந்த விவாதம் எழுப்பும் முக்கியமான கேள்வியாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |