வடக்கு மக்களை காப்பாற்றுங்கள் : அரசிடம் அவசர கோரிக்கை விடும் நாமல்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள குடும்பங்கள், வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் இடம்பெயர்வு அபாயத்தில் இருப்பதால், அவர்களைப் பாதுகாக்க உடனடியாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(25) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பருவகால மழை வெள்ளம் மற்றும் பிற அவசரநிலைகள் ஏற்படவுள்ளதால், பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் தற்காலிக தங்குமிடம் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சிரமங்களை நாமல் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
இயற்கை பேரழிவிலிருந்து பாதுகாருங்கள்
“ஒவ்வொரு ஆண்டும், குடும்பங்கள் இடம்பெயர்ந்து பேரிடர் தாக்குதலுக்குப் பிறகுதான் தஞ்சம் அடைகின்றன. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இடையூறுகளைக் குறைப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை முன்கூட்டியே இடமாற்றம் செய்ய ஒருங்கிணைந்த முயற்சி தேவை,” என்று அவர் கூறினார்.
பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படகூடாது
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், குறிப்பாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தயாராகி வருபவர்கள் குறித்தும் அவர் கவலைகளை எழுப்பினார்.
“இயற்கை பேரழிவுகள் நமது இளம் மாணவர்களின் எதிர்காலத்தைத் தடம் புரள அனுமதிக்க முடியாது. இந்த மாணவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரையும் பிரதமரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், இதனால் அவர்களின் கல்வி தடையின்றி தொடரும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
