கைது உத்தரவின் எதிரொலி: புதிய பாதையில் பயணித்த நெதன்யாகுவின் விமானம்
இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகின்றது.
இதில் உரையாடிய உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் காஸா மீதான இஸ்ரேலின் போரை பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு குற்றம்சாட்டி வருகின்றனர்.
கைது உத்தரவு
அத்தோடு, கடந்த 2024 ஆம் ஆண்டு பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
அத்தோடு, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசுகள் பெஞ்சமின் நெதன்யாகு தங்களது நாட்டுக்குள் வந்தால் கைது செய்வோம் என அறிவித்துள்ளன.
புதிய பாதை
இந்தநிலையில், ஐ.நா அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து விமானம் மூலம் நேற்று (25) நியூயார்க் நகருக்குச் சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வழியைத் தவிர்த்து புதிய பாதையில் பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அவரது விமானம் வழக்கத்தை விட 600 கிலோ மீற்றர் அதிகம் பயணித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானப் பயணங்கள்
இதுகுறித்து, விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையதளங்களில் வெளியான வரைப்படங்களில் அவரது விமானம் புதிய பாதையில் பறந்திருப்பது பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு ஐ.நா.வின் பொது அவைக் கூட்டத்தில் பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
இதையடுத்து, நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமென ஐ.நாவில் பல நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதால் கைது செய்யப்படுவதற்கு பயந்து அவரது விமானம் புதிய பாதையில் பறந்ததிருக்கலாம் என கருத்தக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
