ஹோர்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம்! ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்காவின் திட்டங்கள் வெட்கக்கேடான முறையில் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளதாகவும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்கா முன்னெடுத்த பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் இன்று புதியதொரு மாற்றம் உருவாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய படைகளின் மன உறுதி
1622 ஆம் ஆண்டு ஹோர்முஸ் நீரிணையில் இருந்து போர்த்துக்கேய படைகள் வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் தேசிய பாரசீக வளைகுடா தினத்தை முன்னிட்டு ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை ஊடாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையானது கடந்த நூற்றாண்டுகளில் பல தீய சக்திகளின் பேராசைக்கு உள்ளான இடமாக இருந்தபோதிலும், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரானிய படைகளின் மன உறுதி மற்றும் துணிச்சலான போராட்டத்தை உலகம் கண்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அற்ற எதிர்காலம்
அத்துடன், பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் எதிர்காலம் அமெரிக்கா அற்ற ஒரு எதிர்காலமாக அமையும் எனவும், அது இப்பகுதி மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரானிய மக்கள் தமது அணுசக்தி மற்றும் ஏவுகணை வலிமைகளைத் தேசிய சொத்தாகக் கருதுவதாகவும், அவற்றை தமது தரை, நீர் மற்றும் வான் எல்லைகளைப் போலவே மிகத் தீவிரமாகப் பாதுகாப்பார்கள் என்றும் கமேனி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |