கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னரே இனி பேச்சுவார்த்தை! பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னரே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் குறித்து, கத்தாரில் இருதரப்பினரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நேற்றுமுன்தினம் (ஜூலை 1) மேற்கொண்டனர்.
நேர்மறையான முன்னேற்றம்
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பது, முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அதன்போது, இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கத்தார் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றன.
இதேவேளை, கத்தார் மற்றும் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் தனித்தனியாக அமெரிக்கா மற்றும் ஈரான் உடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களை நேர்மறையான முன்னேற்றங்களுடன் நிறைவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று (ஜூலை 2) தெரிவித்துள்ளனர்.
கமேனியின் இறுதிச்சடங்கு
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் இடையேயான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தை கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு நடைபெறும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Image Credit: Al-Monitor
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் ஜூலை 9 ஆம் திகதி மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |