மகிந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது! சட்டமா அதிபர் தீர்மானம்
2022ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின்போது, கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படமாட்டாது என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில், மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரரும் அப்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி வகித்தார்.
போராட்டக்காரர்கள் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளான இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு புலனாய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என சட்டமா அதிபர் கருதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சியுள்ள 31 சந்தேகநபர்கள்
இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், சூழ்நிலைச் சாட்சியங்கள் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட காணொளிகளின் நிபுணத்துவப் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், மேலும் 34 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சந்தேகநபர்களில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் மற்றும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் வசந்த ஹடபாங்கொட ஆகிய மூவர் இதற்கிடையில் உயிரிழந்துள்ளனர்.
இதனால், உயிரிழந்த மூவரைத் தவிர்த்து எஞ்சியுள்ள 31 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமை, கொலை முயற்சி மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 327 குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்களுக்கு எதிராக சுமத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமொன்றை நியமிக்குமாறு தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவிடம் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள சந்தேகநபர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவை முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக, தெஹிவளை–கல்கிசை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமல் புஷ்பகுமார டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகே, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மற்றும் ‘அரபி வசந்த’ என அழைக்கப்படும் அசுங்க நலக்க விஜயசிங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.