கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை : ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை
சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஏற்கனவே கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சிறிலங்கா பொதுஜன பெரமுனவினரால் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே, குறித்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹேஷான் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாதெனவும் அதற்கான சாட்சியங்கள் இல்லையென்பதை சுட்டிக்காட்டியும் சிறிலங்கா பொதுஜன பெரமுன குறித்த பிரேரணையை தோல்வியடைய செய்தது.
தரமற்ற மருந்து இறக்குமதி
இந்த நிலையில், தற்போது கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இவ்வாறான கருத்துக்களை மீண்டும் முன்வைக்க முடியாதென கவிந்த ஹேஷான் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தரமற்ற இம்யூனோகுளோபின் மருந்துகளை கேஹேலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்தமை தற்போது அனைவரும் அறிந்த உண்மையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கேஹேலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த யாப்பா பண்டார கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |