இலங்கையில் இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வருடத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் காணப்பட்ட முறைமையின் கீழ் ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள், விநியோகத்தர்கள் ஊடாக பெறப்பட்டமையால் நிலக்கரியின் தரம் தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டது.
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு
புதிய முறைமையின் கீழ் குறித்த பரிசோதனை அறிக்கைகளை நேரடியாக இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இடைத்தரகர்கள் மூலம் இடம்பெறும் நிதி மற்றும் தர மோசடிகளை முழுமையாக தடுத்து நிறுத்த முடியும்.

ஓகஸ்ட் மாதம் நாடு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்மின் உற்பத்தியைத் தவிர்த்து, மின் உற்பத்திக்குத் தேவையான நீர் இருப்பு நாட்டில் தற்போது போதுமானதாக உள்ளது.
ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்குள், 868 ஜிகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீர் பெறப்பட்டுள்ளதுடன் தற்போது, நாட்டின் மின்சாரத் தேவையில் 48 சதவீதம் நீர்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
அதன்படி, மின்சார உற்பத்தியில் ஏற்படும் எந்தவொரு பற்றாக்குறையாலும் இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என்று அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |