இரவோடிரவாக ரஷ்யாவில் கிம் ஜோங் உன்
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தமது நாட்டிற்கு விஜயம் செய்துள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வடகொரியத் தலைவரின் ரஷ்ய விஜயம் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்குள் பிரவேசம்
கிம் ஜோங் உன்னை ஏற்றிய பிரத்தியேக தொடருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வடகொரியாவில் இருந்து புறப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் எல்லையை தாண்டி, ரஷ்யாவிற்குள் பிரவேசித்துள்ளார்.
இந்த நிலையில் கிம் ஜோங் உன் ரஷ்யாவில் உள்ளதை கிரெம்ளினின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவில் உறுதி செய்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை, சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு உதவிகளுடன் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கான சாத்தியமான தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கு வடகொரியா எதிர்பார்த்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலாக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பெற்றுக்கொள்ள ரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதன் பின்னணியில் வடகொரிய எல்லையில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ரஷ்யாவின் விளாடிவொஸ்ரோக் (Vladivostok) நகருக்கு கிம் ஜோங் உன் விஜயம் செய்துள்ளார்.
அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
உன்னிப்பான கண்காணிப்பு
இந்தச் சந்திப்பை மிகவும் உன்னிப்பாக கண்காணிப்பதாக கூறியுள்ள தென்கொரியா, வடகொரியாவுடனான ஆயுத ஒப்பந்தங்கள் ஐ.நாவின் தடைகளை மீறுவதாக அமையும் என கூறியுள்ளது.
ரஷ்யா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான மனித பரிமாற்றங்கள் உட்பட கொரிய தீபகற்பத்திலுள்ள நிலைமைகளின் போக்கை கண்காணிப்பதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு உறுப்பு நாடும், பாதுகாப்பு பேரவையின் தீர்மானங்களை மீறக் கூடாது எனவும் தென்கொரிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடனான இராணுவ ஒத்துழைப்புகள், சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவ்வாறான விடயங்கள் இடம்பெறக் கூடாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளாார்.
YOU MAY LIKE THIS