நாட்டுக்கு ஒரு அபாய செய்தியை வழங்கிய நுகேகொடை பேரணி!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நேற்று (21.11.2025) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற மக்கள் குரல் பேரணி ஒரு அபாய செய்தியை நாட்டை நேசிக்கின்ற மக்களுக்கு இட்டுச் சென்றுள்ளதாக காத்தான்குடி அரசியல் முக்கியஸ்தரும், சமூக செயற்பாட்டாளருமான யூ.எல்.எம்.என்.முபீ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று (21.11.2025) நடைபெற்ற பேரணி தொடர்பில் கருத்து வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அறிக்கை
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் 8000 பேர் அளவில் மக்கள் சேரலாம் என்ற அறிக்கையின் பிறகு மகிந்த ராஜபக்ச ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து பின்வாங்கிய போதிலும் சுமார் 7000க்கு உட்பட்ட வரையிலான பொதுமக்கள் இவ்வார்பாட்டத்தில் கலந்து கொண்ட போதும் இதனை முற்று முழுதாக தோல்வி அடைந்த பேரணி என்று சொல்ல முடியாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைப் பற்றி கணக்கெடுக்க தேவையில்லை என புலனாய்வு அறிக்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த புலனாய்வு அறிக்கையின் கண்ணோட்டத்தில் முற்போக்கு ஊடகங்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை நோக்கவில்லை.
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மக்கள் மதுபானத்துக்கும், பணத்திற்கும் அழைத்து வரப்பட்ட போதும் பச்சையாக இனவாதத்தை கக்கியது இவ் ஆர்ப்பாட்ட மேடைகளிலும் ஊர்வலத்திலும் பிரதிபலித்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க காற்சட்டை அணிந்து தலதா மாளிகைக்குச் சென்றதை ஒரு குற்றமாக ஒரு பேச்சாளர் பேசியதும் அத்தோடு இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் பௌத்த மத குருமார்களை சங்கைப்படுத்துவதில்லை கும்பிடாமல் கைலாகு கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
பௌத்த மதம் இந்த ஆட்சியாளர்களால் கௌரவப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்டு1956இல் பண்டாரநாயக்கா பௌத்த இனவாதத்தை பேசி ஆட்சியை கைப்பற்றியது போல் பின்னைய நாட்களில் கோட்டாபய ராஜபக்ச சிங்களப் பெருந்தேசிய வாதத்தை கோஷமாக முன்நிறுத்தி ஜனாதிபதி ஆகியதையும் ஆதாரமாகக் கொண்டு இனவாதத்தின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ஒரு முயற்சியாக காணப்பட்டது.
ஆட்சி மாற்றம்
அத்தோடு இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் மிகப்பெரும் ஊழல் குற்றவாளிகளாகவும் , அவர்கள் பல்வேறு வழக்குகளை எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள நிலையில் தங்களைப் பாதுகாக்க தாங்கள் சிறை செல்லாமல் தப்பிக்க ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் அப்பாவி சிங்கள மக்களின் மனதில் விஷமத்தை தூண்டி குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தப்பட்ட ஒத்துகையாகவும் முதற்படியாகவும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தை அடையாளப்படுத்த முடியும்.
நாட்டை மிகப் பெரும் கடனுக்குள் தள்ளி மிகப்பெரும் ஊழல் செய்து தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்த மகிந்தவும் அவரது கூட்டாளிகளும் தாங்கள் சிறை செல்வதிலிருந்து தப்பிக்க இனவாதத்தை கையில் எடுத்துள்ளனர்.
ஆனால் இதேபோன்று ஒரு ஆர்ப்பாட்டம் நல்லாட்சி அரசுக்கு எதிராக 2018ல் மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்டது அப்போது ரணில் விக்ரமசிங்க அந்த ஆர்ப்பாட்ட பேரணியை கணக்கெடுக்காமல் விட்டது பின்னர் நல்லாட்சி அரசையே வீட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.
2005 இல் மகிந்த ராஜபக்ச ஆட்சி பீடம் ஏறியது முதல் இந்த நாட்டுக்கு சாபம் பிடித்துக் கொண்டது. இப்போதுதான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாட்டிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது நாளாந்தம் தெரிந்துக்கொண்டு வருகிறது.
ஆனால் அரசாங்கம் விவேகத்தோடும் புத்தி சாதுரியத்தோடும் தனக்கு எதிரான சவால்களை முகம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை ஏற்படுத்திய பொருளாதார குற்றவாளிகளாக மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் P.P ஜெயசுந்தர போன்றவர்களை உயர்நீதிமன்றம் அறிவித்த போதும் அது தொடர்பில் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோன்று தாஜுதீன் கொலை வழக்கில் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச குற்றவாளிகள் என பரவலாக விசாரணைகள் மூலம் தெரியப்படுத்தப்பட்ட போதும் அவர்களை நீதியின் முன்நிறுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
முறையான நடவடிக்கை
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் மற்றும் முன்னை அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினர் தொடர்பில் இருப்பது அவ்வப்போது தெரியப்படுத்தப்பட்ட போதும் அது தொடர்பில் முறையான நடவடிக்கை எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

மத்திய வங்கி பிணைமுறை முறைகேடு தொடர்பிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவதில் அண்டைய நாடும் மற்றும் ஒரு பிரதான நாடும் மிகப் பெரும் அழுத்தத்தை அரசுக்கு கொடுப்பதாக திரைமறைவு செய்திகள் கூறுகின்றன.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அண்டை நாடு ஒன்றின் மறைகரம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தைரியமாக இந்த முன்னாள் ஆட்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அநுர அரசாங்கம் இந்த இனவாதத் தீயில் கருகி வீட்டுக்குச் செல்ல வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை ஏற்படலாம்.
இது நாட்டை நேசிக்கின்ற அமைதியை விரும்புகின்ற ஜனநாயகத்தை மதிக்கின்ற மிகப்பெரும் மக்கள் கூட்டத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும். இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடித்து நிலைக்க வேண்டும் என்பதிலே நாம் மிகுந்த விருப்பமாக இருக்கிறோம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை விட எவ்வளவோ முன்னேற்றங்களைக் கொண்ட அநுரகுமார திசநாயக்காவின் தலைமையிலான இந்த ஆட்சி நீடித்து நினைக்க வேண்டும்.
மிகப்பெரும் ஊழல் குற்றவாளிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து ராஜபக்சக்களையும் குற்றம் புரிந்த முன்னாள் அமைச்சர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே இந்த அரசின் ஆயுள் நீடித்து நிலைக்கும்.
இதனை ஜனாதிபதி செய்வாரா?” எனவும் சமூக செயற்பாட்டாளருமான யூ.எல்.எம்.என்.முபீ கேள்வியெழுப்பியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |