இறுதிப்போட்டியில் மண்ணை கவ்வியது இந்தியா! அவுஸ்திரேலியா உலக சாதனை
புதிய இணைப்பு
உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் உலக கிண்ணத்தை ஆறாவது தடவையாக வெற்றிகொள்ளும் முதல் அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் வாகையர் பட்டத்தை வெற்றிகொள்வதற்கு 241 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை அவுஸ்திரேலியாவிற்கு இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிய போதிலும் மறுபுறத்தில் இருந்த சுப்மன் கில் 4 ஓட்டங்களுடன் மிச்சேல் ஸ்டாக்கின் பந்துவீச்சியில் ஆட்டமிழந்தார்.
உலக சாதனை
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 76 ஆக உயர்த்தினர்.
எனினும் க்ளன் மெக்ஸ்வெல்லின் பந்தை ஓங்கி அடிக்க முற்பட்ட போது, ட்ராவிட் ஹெட்டிடம் பிடிகொடுத்து, ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
31 பந்துகளில் 3 சிக்ஸர்கள், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார்.
இந்தப் போட்டியில் அடித்த 3 சிக்சர்களின் மூலம் ரோஹித் சர்மா மற்றுமொரு உலக சாதனையை படைத்துள்ளார் .
இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார. இதற்கு முன்னர் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.
கடந்த இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக சதங்களை குவித்த ஸ்ரேயஸ் ஐயர், நான்கு ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில், பட் கம்மிங்ஸ்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.
எனினும் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
எனினும் துரதிஷ்டவசமாக 63 பந்தில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பட் கம்மிங்ஸ் வீசிய பந்துவீச்சில், விராட் கோஹ்லி ஆட்டமிழந்தமை, இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அரைசதம் அடித்து சாதனை
எனினும் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை 2 முறை அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி இந்தப் போட்டியில் படைத்துள்ளார்.
கடந்த 2015 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்துள்ளார்.
இதற்கு பின்னர் விராட் கோலி கடந்த 2019 மற்றும் நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் என இரண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
விராட் கோஹ்லி ஆட்டமிழந்ததை தொடர்ந்து களமிறங்கிய சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அஹமதாபாத் மைதானமே மௌனமானது.
தொடர்ந்து நிதனமாக துடுப்பெடுத்தாடிவந்த கே.எல். ராகுலும் 107 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மிச்சேல் ஸ்டாக்கின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ஜோஸ் இங்லிஸ்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
வெற்றியிலக்கு
குல்தீப் யாதேவ் 10 ஓட்டங்களைப் பெற்று இறுதிப் பந்துவீச்சில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, 50 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணியால் 240 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
மிச்சேல் ஸ்டாக் 3 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசல்வூட் மற்றும் பட் கம்மிங்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதன்பிரகாரம் 241 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடுகின்றது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் உலக கிண்ணத்தை ஆறாவது தடவையாக வெற்றிகொள்ளும் முதல் அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா படைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு
உலகக்கிண்ண இறுதிப்போட்டி இன்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்க உள்ள போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இன்னும் சற்று வேளைகளில் ஆரம்பமாக உள்ள போட்டிக்கான நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வென்று களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
அணியில் மாற்றம் இல்லை
இரு அணிகளிலும் மாற்றமின்றி அரையிறுதியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியில், ரோகித் சர்மா (அணித்தலைவர்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் விளையாட உள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியில் , டேவிட் வோனர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், லபுஸ்சேன், மக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், பேட் கம்மின்ஸ் (அணித்தலைவர்), ஸ்டார்க், அடம் ஜம்பா, ஹேசில்வுட் ஆகியோர் விளையாட உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |