ராஜபக்சர்கள் மூட்டும் தீப்பொறி!! கொழுந்து விட்டெரியும் என எச்சரிக்கை
“ஆட்சியதிகாரத்தினைத் தக்கவைக்க வேண்டும் என்ற உங்களது இந்த ஆர்வத்தால் நீங்கள் மூட்டும் இரண்டாவது தீப்பொறி இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு நாட்டை எரிய வைக்கப் போகின்றதோ தெரியவில்லை” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (Govinthan Karunakaram) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வரலாற்றிலிருந்து நீங்கள் பாடம் எதனையும் கற்கவில்லை. மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளை தான் இழைத்துக் கொண்டு செல்கின்றீர்கள் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறும் நோக்கம் ஒன்றையே இலக்காகக் கொண்டு எஸ்.டப்ளியூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆட்சியமைத்து 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தினைக் கொண்டு வருவேன் எனக் கூறி பௌத்த சிங்கள மக்களினை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களது உணர்ச்சியினை தான் ஆட்சியமைப்பதற்கான அத்திவாரமாக்கினார்.
அன்று அவர், ஆட்சிக்காக மூட்டிய தீப்பொறி 6 தசாப்த காலமாக இந்த நாட்டில் கொழுந்து விட்டெரிந்தது. அது முறையாக அணையமுன்பே “ஒரு நாடு ஒரு சட்டமென்று” இன்னொரு தீப்பொறியினை ஏற்றுவதற்கு முயல்கின்றீர்கள்.
இதே போன்றுதான் கிழக்குத் தொல்பொருள் அரச தலைவரது செயலணி என்று ஒன்றை அமைத்து கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம்களது பாரம்பரிய வழிபாட்டிடங்களையும், பாரம்பரிய நிலங்களையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றீர்கள்.
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களுக்கு மேலாகியும் வடக்குக்கிழக்கில் இராணுவ முகாம் அமைப்பதும், புதிய படையணிகளை உருவாக்கி அவற்றை வடக்குக் கிழக்கில் இருந்தி வைப்பதும் இன்னமும் முன்னர் கையகப்படுத்திய தனியார் நிலங்களினை மீளக் கொடுக்காது புதிதாக படைத்துறை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்வதும் நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளாகி விட்டன” என காட்டமாக தெரிவித்துள்ளார்.