இறையடி சேர்ந்த மாப்பாண முதலியாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல் செய்தி
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தின் 10 ஆவது கோயில் அதிகாரி ஆர். குமாரதாஸ் மாப்பாண முதலியார் (Iragunatha Kumaradas Mappana Mudaliar) இறையடி சேர்ந்தமை தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச Sajith Premadasa வெளியிட்டுள்ள இரங்கச் செய்தியில் இந்த விடயத்தினை குறிப்பிட்டடுள்ளார்.
தொடர்ந்தும் அந்த இரங்கள் செய்தியில்,
நல்லூர் கோயிலின் 10 ஆவது கோயில் அதிகாரியாக 1965 ஆம் ஆண்டு மிக இள வயதில் பொறுப்பேற்ற இவர், தொடர்ச்சியாக 56 வருடங்கள் முருகப்பெருமானுக்கு தொண்டாற்றினார்.
இவரது அயராத முயற்சியின் பயனாக மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் (J.R. Jayawardena) அனுமதியுடன் அரச காணிக்குப் பதிலாக கேணித் திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாற்றினார்.
அவரது 50 வருடங்களுக்கு மேலான கடின உழைப்பும் முருகன் மேல் கொண்ட பக்தியும் இன்றைய நல்லூர் பெருங்கோயிலின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது.
நல்லூரின் நேரம் தவறாது பூசைகளையும் அழகன் முருகனையும் பக்தி பூர்வமாக வணங்குவதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக 1 ரூபா அர்ச்சனையை இன்றும் நடைமுறைப்படுத்துவதற்குக் காரணமானவர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணி மூலம் வரலாற்றில் இலங்கையில் உள்ள இந்துக் கோயில்களில் தங்கக் கூரை கொண்டு வேயப்பட்ட முதலாவது கோயில் என்ற பெருமை நல்லூருக்கு கிடைப்பதற்கு அயராது பாடுபட்டவர்.
அன்னாரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
