இந்தியா - இலங்கை இடையே திருட்டுத்தனமாக பாதுகாப்பு ஒப்பந்தம்: வலுக்கும் எதிர்ப்பு
இந்தியாவுடன் (India) அரசாங்கம் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் திருட்டுத்தனமாக கைச்சாத்திடப்பட்டால் அதனொரு உறுப்புரையையேனும் செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை என முன்னிலை சோசலிச கட்சியின் (FSC) கல்விச் செயலாளர் புபுது ஜாகொட (Pubudu Jagoda) தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சி ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “1971ஆம் ஆண்டு ஏப்ரல் போராட்டத்தின் 54 ஆவது ஆண்டை கொண்டாடும் 2025 ஏப்ரல் 5ஆம் திகதி அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் (Narendra Modi) அரசாங்கம் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருக்கிறது.
சிறிலங்கா அமைச்சரவை
இந்த ஒப்பந்தங்கள் என்ன என இதுவரை நாட்டிற்கு வெளிப்படுத்தவில்லை. மக்களுக்கு மாத்திரமல்ல நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்கவில்லை.
நாங்கள் அறிந்த மட்டத்தில் அமைச்சரவைக்கும் ஒப்பந்தத்தின் நகல் பத்திரம் காட்டப்படவில்லை. அமைச்சரவை அமைச்சர்கள் எங்களுக்கு பொய் சொல்கிறார்கள் அல்லது இந்த ஒப்பந்தம் தொடர்பில் யாருக்கும் தெரியாது.
மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போது, குறிப்பாக பல தலைமுறையினரை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்போது மக்களிடம் கேட்க வேண்டும்.
இவ்வாறான ஒப்பந்தங்கள் சமூகமயப்படுத்தி கருத்தாடல் மேற்கொண்டு மக்கள் அபிப்பிராயத்துடன் அனுமதித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒப்பந்தத்தின் பிரதியை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து விவாதிக்க வேண்டும்.
அவ்வாறு எதுவும் இல்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்த ஒப்பந்தத்தை பார்க்கக்கூட கேட்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு, ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவுக்கு எதிராக வாய் திறப்பதில்லை.
கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தம்
நாடாளுமன்றத்துக்குள் அரசாங்கமும் எதிர்க் கட்சியும் இணைந்தே மக்கள் விரோத செயலை மேற்கொள்கின்றன. அரசாங்கம் அரசியல் கலாசாரத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து அதனை முற்றாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுப்படுத்தியுள்ளது.
அரசியல் கலாசாரம் என்பது இரண்டு வேளை பசியுடன் இருப்பதும் பேருந்து மற்றும் தொடருந்து வண்டியில் செல்வது மாத்திரமல்ல. பாரதூரமான அரசியல் தீர்வுகளை மக்களுடன் கலந்துரையாடி மேற்கொள்வதும் சிறந்த அரசியல் கலாசாரத்துக்கு உரியதாகும்.
இன்றாகும்போது மக்கள் விடுதலை முன்னணி அரசியல் கலாசாரத்தை மாத்திரமல்ல அரசியலையும் குழப்பிக்கொண்டுள்ளது. அரசாங்கம் இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் விளையாட்டு விடயமல்ல.
இந்தியா யுத்த ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு. ஆசியாவின் நேட்டோ என்று அறிமுகப்படுத்தப்படும் ‘இக்வட்’ அமைப்பு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்
இதற்கு மேலதிகமாக இந்தியா அமெரிக்காவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட தீர்மானித்திருக்கிறது.
ஏகாதிபத்தியவாதிகள், உலக வல்லரசு, பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு முன்னால் மண்டியிட்டு அழிவுகரமான ஏகாதிபத்திய யுத்தம் ஒன்றில் மரணிக்கும் தலையெழுத்தை இலங்கையர்களின் நெற்றியில் குத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
இது முற்றிலும் காட்டிக்கொடுப்பாகும். இந்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக மக்கள் சக்தி ஒன்றை கட்டியெழுப்புவோம். இந்தியாவுடன் அரசாங்கம் கைச்சாத்திட இருக்கும் ஒப்பந்தங்களின் பிரதிகளை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
அதனை மக்களுக்கு காட்டாமல் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டால், அதன் ஒரு உறுப்புரையைக்கூட செயற்படுத்த முடியாத சக்தி ஒன்றை கட்டியெழுப்புவோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 18 மணி நேரம் முன்
