பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிஐடிக்கு அழைத்து வரப்பட்ட அமில சம்பத்
புதிய இணைப்பு
ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ரொட்டும்ப அமில' என்ற அமில சம்பத் பலத்த பாதுகாப்புடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று காலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் அங்குள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினர் அவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பின்னர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

முதலாம் இணைப்பு
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றவாளி : விசாரணைகள் தீவிரம்
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான அமில சம்பத், இலங்கைக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும் மாத்தறை, ஊருபொக்க பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
கிளப் வசந்த கொலைச் சம்பவம்
அமில சம்பத் 'அங்கொட லொக்கா' மற்றும் 'மாகந்துரே மதுஷ்' ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதுடன், கடந்த 2024.07.08 ஆம் திகதி இடம்பெற்ற 'கிளப் வசந்த' கொலையுடனும் தொடர்புடையவர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும், கடந்த 2016.04.29 ஆம் திகதி முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை ஒன்றையும் இவர் மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர் கடந்த 2019.03.28 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் மாகந்துரே மதுஷின் பிறந்தநாள் விருந்துபசாரத்தின் போது கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டிருந்த போதிலும், கடந்த 2023.05.03 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றிருந்தார்.
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள்
இவ்வாறான பின்னணியில், இவரைக் கைது செய்வதற்காக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களினால் சர்வதேச சிவப்பு அறிவித்தல்களும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 'ரொட்டும்ப அமில', இன்று காலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு சந்தேகநபரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |