நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் : பாகிஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் நிறுவன தலைவருமான நவாஸ் ஷெரீப், நான்கு ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பினார்.
இவர் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விரைவில் பொதுத்தேர்தல்
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல பிணை அவருக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஐரோப்பிய நாடான பிரித்தானியா சென்ற அவர், பின் பாகிஸ்தான் திரும்பவில்லை.
பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழ்நிலையில், தற்போது பிரித்தானியாவில் இருந்து டுபாய் வந்த நவாஸ் ஷெரீப், அங்கிருந்து விமானம் மூலம் இஸ்லாமாபாத் சென்றடைந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
இடைக்கால பிணை
இது தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தரான கவாஜா முகமது ஆசிப் கூறுகையில், இது நம்பிக்கை மற்றும் கொண்டாட்டத்திற்கான நேரம். நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் நல்லதெனக் கூறினார்.
நவாஸ் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இடைக்கால பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நிம்மதி அளித்துள்ளது.