யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு நகை போட காசு சேர்க்கும் பெற்றோர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது இப்போது பிள்ளைகளை விட பெற்றோருக்குத்தான் பரீட்சை களமாகிவிட்டது.அதிலும் யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளை அந்த ஆசிரியர், இந்த ஆசிரியர் என ஓய்வில்லாமல் கொண்டு ஓடித்திரிகிறார்கள் அவர்கள்.
இதில் வேடிக்கை என்ன என்றால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஓடித்திரியும் ஓட்டத்திற்கு ஏற்ப பின்னர் அவர்கள் ஓடுவதில்லை.இதனால் அந்தப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளை அடுத்து வரும் பரீட்சையில் தோல்வியையே சந்தித்துவிடுகிறது.
சரி அது போகட்டும் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியருக்கு நகைபோட வருடாந்தம் அந்த மாணவர்களின் பெற்றோரிடம் பெற்றோர்களால் பணம் அறவிடப்படுகிறது.
கைவிரிக்கும் பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம் கைவிரிக்கிறது இதற்கும் தமக்கும் பொறுப்பல்ல என்று. ஆனால் இந்த நகை போடும் திருவிழா பள்ளிக்கூடத்திலேயே நடைபெறுகிறது.அப்படியென்றால் மறைமுகமாக இதற்கு பள்ளிக்கூடம் ஆதரவளிக்கிறது என்றுதானே அர்த்தம் என சிலர் குசுகுசுக்கின்றனர்.
இம்முறையும் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெறறோரிடம் இருந்து தலா 10,500 ரூபா பணம் அறவிடப்பட்டு ஆசிரியருக்கு நகை போடப்பட்டுள்ளது.
காசை திரட்ட படாதபாடு படும் பெற்றோர்
எத்தனை பிள்ளைகளின் பெற்றோர் இந்த காசை திரட்ட கஷ்ரப்பட்டிருப்பார்கள். பாடசாலையோ அல்லது குறித்த ஆசிரியரோ இவ்வாறான அன்பளிப்பு தேவை இல்லை என்று உறுதியாக மறுத்தால் பெற்றோர் இதனை ஏன் ஏற்பாடு செய்யப்போகின்றார்கள் என சிலர் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
அதுவும் ஒருவகையில் சரிபோலவே படுகின்றது.
ஒருவர் நகைச்சுவையாக கூறினார் வருடாந்தம் இப்படியே ஆசிரியருக்கு போடப்படும் நகையால் அவர் தனது பிள்ளைக்கு சீதனத்தையே சேர்த்து போடுவார் என்று...