பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி இரத்து - புதிய சட்டம் அமுல்
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை இரத்து செய்வதற்கான “Chief of Defence Staff (Repeal)” சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றுரையை வழங்கியுள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22.09.2026) முதல் 2026ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (இரத்துச் செய்தல்) சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டமூலம் 2026 ஆகஸ்ட் 4ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தலைமை அதிகாரி பதவி
அதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செப்டம்பர் 9ஆம் திகதி இடம்பெற்றதுடன், வாக்கெடுப்பின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை இரத்துச் செய்வதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
குறித்த சட்டத்தின் மூலம், ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நிறுவப்பட்டிருந்தது.
புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியும் இரத்துச் செய்யப்படுகிறது.
மேலும், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்துக்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |