ஹட்டன் - கொழும்பு வீதியில் பயங்கரம் : பேருந்து மீது கற்பாறை சரிந்து விழுந்து ஒருவர் பலி!
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - களுகல காவல்துறை காவலரணுக்கு அருகில் இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த கற்பாறை பேருந்தின் மீது விழுந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதில் பேருந்தின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பலத்த காயமடைந்தத நிலையில் காவல்துறையினரும் பயணிகளும் இணைந்து அவரை கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், கற்பாறை விழுந்ததில் பேருந்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொல்பிட்டிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |