பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு வருகிறது ஆபத்து: நீதிமன்றத்தை நாடியுள்ள முக்கிய தரப்பு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு (Ananda Wijepala) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறுக் கோரி குறித்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா (Renuka Perera) தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்டதாக செய்திகள்
கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதியால் பிரதிவாதியான ஆனந்த விஜேபால பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதாக மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஆனந்த விஜேபால ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச பதவி
இந்த விடயம் தொடர்பாக தாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்ததாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியாக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 91 ஆவது பிரிவில் பொது சேவையில் ஈடுபடும் ஒருவர் நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க தகுதியற்றவர் என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி பதவி என்பது ஒரு அரச பதவி என்றும், அதன்படி, அமைச்சர் ஆனந்த விஜேபால அத்தகைய பதவியை வகிக்கும் அதேவேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதி முடிவு
இதனடிப்படையில், அரசியலமைப்பின்படி அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
அத்தோடு, இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், அத்துடன் ஆனந்த விஜேபால பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |